தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் வட்டம் ஆடுதுறை அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகள் சுகாதார வளாகத்தில் விடுபட்ட தடுப்புச் சுவர் கட்டப்பட்டது. மேலும், இது தொடர்பாக 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
ஆடுதுறையில் பள்ளி மேம்பாட்டு மானியத்தில் கீழ், ரூ.34 லட்சம் மதிப்பில் அரசு மேல்நிலை பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கான சுகாதார வளாகம் கட்டப்பட்டது. இதனை கடந்த 6-ம் தேதி மாணவர்களின் பயன்பாட்டிற்காக பேரூராட்சி தலைவர் திறந்து வைத்தார்.
அந்தச் சுகாதார வளாகத்தில் தடுப்புச் சுவர் ஏதும் இல்லாமல், கழிவு வெளியேற்றும் இருக்கைகள் வெளிப் படையாக இருக்கும் காட்சிகள் அன்மையில் சமூக வலைதளம் மூலம் பரவி சர்ச்சை ஏற்படுத்திது. இதையடுத்து, அந்தக் சுகாதார வளாகத்தின் இடையில் தடுப்பு சுவர் கட்ட அரச தரப்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து திருச்சி மண்டல செயற்பொறியாளர் சுப்பிரமணியன், தஞ்சாவூர் பேரூராட்சிகள் உதவி இயக்குநர் மாகீர் அபூபக்கர், உதவி செயற்பொறியாளர் சதீஷ் பாபு, செயல் அலுவலர் கமலக் கண்ணன், இளநிலை பொறியாளர் ரமேஷ் ஆகியோர் அக்.7ம் தேதி முதல் அக்.8ம் தேதி வரை அந்த இடத்தில் முகாமிட்டு, கட்டிட பணியாளர்கள் மூலம் தனித்தனியாக தடுப்புகளை கட்டி முடிக்கப்பட்டன.
இதனிடையே, பணியில் கவனக்குறைவாக இருந்ததாக கூறி, ஆடுதுறை செயல் அலுவலர் கமலக்கண்ணன் மற்றும் இளநிலை பொறியாளர் ரமேஷ் ஆகிய 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் 2 பேரும் சென்னையில் உள்ள ஊரக வளர்ச்சி அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.