அவரு இந்த இடத்துல கட்டி இந்த இடத்தையும் எடுத்துக்கலான்னு பாக்குறாறு. அவரு அவரோட இடத்துல ஸ்கூல கட்டி நடத்துறதா இருந்தா நடத்தட்டும். இல்ல, அரசே பள்ளிக்கூடத்த கட்டி முழுசா அரசு பள்ளியா மாத்தி அரசே நடத்தட்டும். எங்க புள்ளைங்க படிக்கிறதுக்கு சரியான இடம் இல்லாமா, அவங்க படிக்கிறதே கேள்விக்குறியா ஏனோ தானோன்னு போகுது. சீக்கிரம் எங்க பிள்ளைகளுக்கு ஒரு பள்ளிக்கூடம் கட்டிக்கொடுத்து அவங்களோட அடிப்படை கல்விய இடையூறு இல்லாம கொடுங்க, பால்வாடிதான் இடிஞ்சி போயிட்டுன்னு அப்டே விட்டது எல்லாம் போதும் அந்த பால்வாடியையும் சீக்கிரம் கட்டிக்கொடுத்துடுங்க” என்று கூறினர்.
இதனைத் தொடர்ந்து பள்ளியின் தாளாளர் வேதா ராஜிடம் பேச முயன்றபோது, `வேலையாக இருக்கிறேன். மீண்டும் அழைக்கிறேன்” என நம் அழைப்பைத் துண்டித்தார்.
இது குறித்து சோழியவிளாகம் பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஏ.சி.பி லெனின், “காந்தி உதவிப்பெறும் தொடக்கப்பள்ளியானது 70 ஆண்டுகளாக இயங்கிக் கொண்டிருக்கிறது. தற்போது இப்பள்ளியின் கட்டடம் சிதிலமடைந்த நிலையில், மாணவர்கள் கிடைக்கும் இடங்களில் கல்வி கற்கும் நிலை உருவாகி, தற்போது ஒரு மாதக் காலமாக சமுதாயக்கூடத்தில் கல்வி பயிலுகின்றனர்.

இதே சமுதாயக்கூடத்தில் தான் பால்லவாடியும் இயங்கிக்கொண்டிருக்கிறது. 20×30 என்ற சிறிய இடத்திலேயே 55-க்கும் மேற்பட்ட மாணாக்கர்களை அடைத்து வைத்து பாடம் நடத்தும் அவலநிலையானது உருவாகியுள்ளது. அப்பள்ளியின் தாளாளர் பள்ளியினை அவரின் சொந்த இடத்தில் கட்டித்தர வேண்டும். இல்லையெனில், அரசு அவரின் உரிமத்தை ரத்து செய்து முழுமையாக அரசு பள்ளியாக மாற்றி புதிய பள்ளிக்கூடத்தை விரைவில் கட்டித்தர வேண்டும்.
அரசா? தாளாளரா என்பதற்கிடையில் மாணவர்களின் ஆரம்பக் கல்வி தத்தளித்துக் கொணடிருக்கிறது. உயர்கல்விதுறை அமைச்சரின் சொந்த தொகுதியிலே பள்ளிக் கட்டடத்திற்கு இடம் இல்லை என்பது வருத்ததிற்குரிய ஒன்றாக இருக்கிறது. மாவட்ட ஆட்சியர் முதல் பல அரசு அதிகாரிகளும் ஆய்வு மேற்கொண்ட போதிலும் தஞ்சையின் கடைசி எல்லை என்பதாலோ என்னவோ இன்னும் நடவடிக்கை எடுக்கப்படாமலே உள்ளது. அரசு விரைந்து புதிய பள்ளிக்கட்டடத்தினை கட்டிக்கொடுத்து மாணவர்கள் ஆரம்பக் கல்வியை சிறப்பாகப் பெற்றிட வழிவகை செய்ய வேண்டும்” என்றார்.
இது குறித்து தஞ்சாவூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பேபியிடம் பேசியபோது, “புதிய பள்ளிக் கட்டடம் கட்டுவதற்கு எஸ்டிமேட் அனுப்பி இருக்கிறோம்” எனக் கூறிவிட்டு நம் அழைப்பை துண்டித்து விட்டார்.
அரசு விரைந்து துறை சார்ந்த நடவடிக்கை மேற்கொண்டு, விரைவில் புதிய பள்ளிக் கட்டடம் அமைத்து தர வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் ஒரே கோரிக்கையாக உள்ளது.