தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் அதிகார மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பதிவாளர் அறையின் பூட்டை உடைத்து, துணை வேந்தரால் நியமிக்கப்பட்ட புதிய பதிவாளர் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். இதற்கு நீக்கம் செய்யப்பட்ட பதிவாளர் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக பொறுப்பு துணை வேந்தர் க.சங்கருக்கும், பொறுப்பு பதிவாளர் சி.தியாகராஜனுக்கும் இடையே கடந்த சில நாட்களாக மோதல் போக்கு நிலவுகிறது. இதனிடையே, டிச.27-ம் தேதி ஒருவரையொருவர் பணி நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தனர்.
அதன்படி, பதிவாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட தியாகரானுக்கு பதிலாக பேராசிரியர் வெற்றிச்செல்வனை அந்தப் பதவியில் நியமித்து பொறுப்பு துணை வேந்தர் க.சங்கர் உத்தரவிட்டார். இதற்கு, தியாகராஜன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் அசாதாரண சூழல் நிலவியது.
இந்நிலையில், புதிய பதிவாளர் நேற்று பொறுப்பேற்பார் என அறிவிக்கப்பட்ட நிலையில், பல்கலைக்கழக வளாகத்தில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டனர். இதனிடையே, புதிய பதிவாளரை பதவி ஏற்கவிடாமல் தடுக்கும் நோக்கில், பதிவாளரின் அறையை தியாகராஜன் பூட்டிவிட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, போலீஸார் முன்னிலையில் பதிவாளர் அறையின் பூட்டு உடைக்கப்பட்டு, புதிய பதிவாளராக வெற்றிச்செல்வன் பொறுப்பேற்றுக் கொண்டார். அப்போது, தலைமைச் செயலர் உத்தரவை மீறி கதவை உடைக்கக்கூடாது என போலீஸாரிடம் தியாகராஜன் தரப்பினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பொறுப்பு துணைவேந்தர் க.சங்கர் கூறும்போது, ‘‘பல்கலைக்கழகத்தில் 40 பேர் நியமன முறைகேடு தொடர்பான வழக்கில் தியாகராஜன் பெயரும் உள்ளதால், வழக்கு விசாரணைக்கு இடையூறாக இருக்கும் என கருதி அவரை பதிவாளர் பதவியில் இருந்து விடுவித்து உத்தரவிட்டேன். அதைத்தொடர்ந்து, சட்டப்பூர்வமாக புதிய பதிவாளர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதில் எந்த விதிமீறல்களும் இல்லை. 10 பேர் கொண்ட குழுவினர் ஆலோசனை செய்து, அதன்பிறகே பதிவாளரின் அறைக் கதவு உடைக்கப்பட்டது. இதில் எந்த விதிமீறல்களும் இல்லை’’ என்றார். தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் இந்த அதிகார மோதல் தொடர்வதால், அங்கு போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.