சிவனாரை அவமதித்து தட்சன் நடத்திய யாகத்தில் தானும் கலந்து கொண்ட குற்றத்துக்காகப் பரிகாரம் தேட முயன்றான் சூரியன். பல தலங்களுக்குச் சென்று பூஜித்தான். அவ்வாறு அவன் வழிபட்ட தலங்களில் ஒன்று, ஸ்ரீசாரபரமேஸ்வரர் ஆலயம்.
சூரிய பூஜைக்கான கோயில்கள், கிழக்குப் பார்த்தவாறு அமைந்திருக்கும். இங்கு, இப்போதும் சூரிய வழிபாடு நடை பெறுகிறது என்பதைக் காட்டும் விதமாக, மாசி மாதம் 13, 14 மற்றும் 15-ஆம் தேதிகளில், சூரியக் கதிர்கள் மூலவர் மீது விழுந்து வணங்குகின்றன.
துர்கை வடிவங்களில் மூவர் மிகச் சிறப்பானவர்கள் என்கிறது புராணம். சிவதுர்க்கை, விஷ்ணுதுர்கை, வைஷ்ணவி துர்கை ஆகிய மூவருமே இங்கு தனித்தனியாக கோஷ்டங்களில் எழுந்தருளி இருப்பது இங்கு விசேஷம். முக்திக்கும் ஞானத்துக்கும் சிவதுர்கை, செல்வவளத்துக்கு விஷ்ணு துர்கை, துணிச்சலுக்கு வைஷ்ணவி துர்கை என்று ராகு காலத்தில் பக்தர்கள் இங்கே கூடி 3 தேவியர்களையும் ஆராதிக்கிறார்கள்.

இந்தக் கோயில், குலோத்துங்க சோழனால் மிகப் பெரிய திருப்பணிகளைக் கண்டது.
ஸ்ரீருணவிமோசன லிங்கத்தையே கடன் நிவர்த்தீஸ்வரர் என்று வணங்குகிறார்கள். ருணம் என்றால் கடன் என்பதாகும். இந்தத் தலத்துக்கு வந்த மார்க்கண்டேயர், தன்னுடைய பிறவிப் பிணி (பிறவியும் கடன்தானே; பிறப்பில் தொடங்கி இறப்பு வரை பல்வேறு கடன்களை உடம்பு தாங்குகிறதே) நீங்குவதற்காக, சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து வழிபட்டாராம். அந்தச் சிவலிங்கமே, ருணவிமோசன சிவலிங்கம் என்பது ஐதீகம்.
இம்மைக்கும் மறுமைக்கும் கடன் தீர்க்கும் ருணவிமோசனர், லௌகிகக் கடன்களையும் சிக்கல்களையும் இந்தப் பிறவியிலும் தீர்ப்பார் என்பது நம்பிக்கை. நீங்காத கடன் தொல்லையால் அவதிப்படுபவர்கள் இங்கு வழிபட்டு, நிவர்த்தி பெறுகின்றனர். மன உளைச்சல், பதற்றம் போன்ற சிக்கல்களிலிருந்து விடுபட, இந்தப் பாடலைப் பாடி, பைரவரை வணங்கும் பிரார்த்தனையும் தவறாமல் நடைபெறுகிறது.