அசுரனான இரண்யனை வதம் செய்ய நரசிம்ம மூர்த்தியாக அவதரித்தார் பெருமாள். அவதாரம் முடிந்தபின்னும் அவரது ஆக்ரோஷம் அடங்கவில்லை.
அவரின் அந்தக் கோபாவேஷத்தைத் தாங்காது நடுங்கத் தொடங்கியது பிரபஞ்சம். இதனால் அஞ்சிய தேவர்கள் சிவபெருமானிடம் சரணடைந்து நரசிம்மரின் உக்கிரத்தைத் தணிக்க வேண்டினர்.
அப்போது சிவபெருமான் யாழி முகம், மனித உடம்பு, எட்டுக்கால், நான்கு கை, இரண்டு இறக்கைகள் ஒரு இறக்கையில் பிரத்யங்காரா பத்ரகாளி, மற்றொன்றில் சூலினி துர்கை எனச் சரபேஸ்வரராக வடிவெடுத்து நரசிம்மரைத் தன் கால்களில் தாங்கிப்பிடித்து அவரின் உக்ரம் தணித்தார்.
அவ்வாறு பிரபஞ்சத்தின் நடுக்கம் தீர்த்த பெருமானாக ஈசன் கோயில் கொண்டிருக்கும் தலமே திருபுவனம்.
மற்றுமொரு புராணத்தில் திரிபுரங்கள் எனப்படும் மூன்று அசுரக் கோட்டைகளை ஈசன் எரித்து அதனால் மக்களிடம் உண்டான நடுக்கத்தைப் போக்கியவர் என்பதாலும் இவருக்கு கம்பகரேஸ்வரர் அதாவது நடுக்கம் தீர்த்த பெருமான் என்கிற திருநாமம் ஏற்பட்டது என்கிறார்கள்.

கும்பகோணம் – மயிலாடுதுறை வழியில், கும்பகோணத்திலிருந்து 5 கி.மீ தொலைவில் உள்ளது திருபுவனம். தேவேந்திரன், அக்னி பகவான், மாந்தாதா வரகுணபாண்டியன், சந்திரன், சூரியன் ஆகியோரால் பூஜிக்கப்பட்ட தலம் இது.
இங்கு அம்பாளின் இன்னொரு பெயர் அறம் வளர்த்த நாயகி. அம்பாளுக்கு நான்கு கைகள், அட்சர மாலை, தாமரைப்பூ வைத்து அபயமளிப்பவளாக அற்புதத் திருக்கோலத்தில் காட்சி அருள்கிறாள் அன்னை. அம்பாளின் பீடம் ஒட்டியாண பீடம் என்ற பத்ம பீடத்தில் உள்ளது.