தஞ்சை மாவட்டம் வடகுரங்காடுதுறை தயாநிதீஸ்வரர்: மருதாணி அரைத்துப் பூசினால் திருமணம் நிச்சயம்!

Spread the love

காவிரிக்கரைத் தலங்களில் இரண்டு ஆடுதுறைத் தலங்கள் உள்ளன. இரண்டுமே புராண சம்பந்தம் உடையவை. இரண்டுமே குரங்குகள் நீராடி ஈசனை வழிபட்ட தலங்கள். அப்படி ஒரு தலம் தான் வடகுரங்காடுதுறை. இந்தத் தலத்தை ஆடுதுறை பெருமாள்கோவில் என்றும் சொல்கிறார்கள்.

கும்பகோணம்- திருவையாறு சாலையில் சுவாமிமலை, உமையாள்புரம், கபிஸ்தலம் ஆகிய ஊர்களைத் தாண்டியதும், உள்ளிக்கடை எனும் ஊர் வரும்.

அந்த ஊரை அடுத்து வருவது இந்த வடகுரங்காடுதுறை. கும்பகோணத்திலிருந்து சுமார் 22 கி.மீ தூரம். இதன் அருகிலேயே சுமார் 5 கி.மீ தொலைவில் உள்ளது திருவையாறு.

வடகுரங்காடுதுறை தயாநிதீஸ்வரர் கோயில்
வடகுரங்காடுதுறை தயாநிதீஸ்வரர் கோயில்

கி.பி, 7-ம் நூற்றாண்டில் திருஞானசம்பந்தர் இத்தலத்துக்கு வந்து வழிபட்டுள்ளார் என்கிறது தலபுராணம். ராமாயண காலத்தவனான வாலி ஈசனை வழிபட்ட தலம் இது என்கிறது தலபுராணம். எனவே இங்குள்ள ஈசனுக்கு `வாலீசர்’ எனும் திருப்பெயர் உண்டு.

‘கோலமா மலரொடு தூபமும் சாந்தமும் கொண்டு போற்றி வாலியார் வழிபடப் பொருந்தினார்’ என்று வாலி வழிபட்டதைக் குறிப்பிட்டு, ஞானசம்பந்தர் இங்குள்ள இறைவனைப் போற்றிப் பாடியுள்ளார்.

வாலி வழிபட்டதால் வாலீஸ்வரர். என்றாலும் வடகுரங்காடுதுறை ஈசனுக்குப் பிரதான திருநாமம், ‘அருள்மிகு தயாநிதீஸ்வரர்’ என்பதாகும். மேலும் இவருக்கு, ‘குலை வணங்கீசர்’ என்ற சிறப்புப் பெயர் உண்டு.

கர்ப்பிணி ஒருத்தி, இந்தத் தலத்தின் வழியே சென்று கொண்டிருந்தாள். கொளுத்தும் வெயில். வயிற்றுச் சுமையுடன் நடந்த அந்தப் பெண்ணுக்கு தண்ணீர் தாகம் எடுத்தது. சுற்றிலும் யாருமே இல்லை. ‘ஈசா… இது என்ன சோதனை’ என்று அவள் மனமுருகி வேண்டிக்கொள்ள ஓர் அற்புதம் நிகழ்ந்தது.

அருகிலிருந்த தென்னை மரம் தானாக தலை சாய்த்தது. பெண்ணின் வாய்க்கு அருகே சாய்ந்து வந்தது தென்னங்குலை. அதில் இருந்த இளநீர் உடைந்து அந்தப் பெண்பிள்ளையின் தாகம் தணிந்தது. குலையை வளைத்துக் கருணை புரிந்ததால், குலை வணங்கீசர் என்கிற திருநாமம் அவருக்கு ஏற்பட்டது.

கருவறையில் வட்ட வடிவ ஆவுடையாருடன், சற்றே குட்டையான பாணம் கொண்டவராக அருளும் மூலவருக்கு, ‘அழகு சடைமுடிநாதர்’ என்ற பெயர் உண்டாம். மூலவர் சந்நிதி சுற்றுச்சுவர்களில் நிறைய கல்வெட்டுகள்.

குரங்காடு துறை ஆழ்வார், குரங்காட்டுமாதேவர் என்றெல்லாம் கல்வெட்டுகளில் குறிக்கப்படுகிறார் இந்தச் சுவாமி. இந்தத் திருக்கோயிலுக்குப் பல்லவர்களும் சோழர்களும் திருப்பணிகள் செய்துள்ளனர்.

வடகுரங்காடுதுறை தயாநிதீஸ்வரர் கோயில்
வடகுரங்காடுதுறை தயாநிதீஸ்வரர் கோயில்

இவ்வூர் ஈசனை சிட்டுக்குருவி ஒன்று தினந்தோறும் வழிபட்டு அருள்பெற்றதாம். எனவே, ‘சிட்டிலிங்கேசர்’ என்ற திருப்பெயரும் உண்டு. சிவனார் மட்டுமல்ல இந்த ஆலயத்தில் அருள்பாலிக்கும் கோஷ்டம் மற்றுமுள்ள சந்நிதிகளில் அருளும் மற்ற தெய்வங்களும் விசேஷமானவர்கள்தான். இங்கே ஒருமுகமும் நான்கு கரங்களும் கொண்டு தேவியருடன் அருள்கிறார் முருகப்பெருமான்.

`திரைக்கரம் கோலி நவமணி கொழித்திடும் சாரல் வயலணி திருக்குரங்காடு துறையுறை பெருமாளே’ என்று போற்றிப் பாடி அருணகிரிநாதர் வணங்கிய முருகன் இவர்.

வழக்கமாக சிவாலயங்களில் பிராகாரச் சுற்றில் நால்வர் பெரு மக்களைத் தரிசிக்கலாம். வடகுரங்காடுதுறை எனும் இந்தத் தலத்தில் – கிழக்குச் சுற்றில் சனி பகவான், பைரவர், சூரியன், நாகர் ஆகியோருக்கு அடுத்தபடியாக நால்வருக்குப் பதிலாக தேவார மூவர் மட்டும் அருள்கிறார்கள். தொடர்ந்து எந்தப் பெண்ணுக்காக தென்னங்குலையை சிவனார் வளைத்தாரோ, அவளின் சிலையையும் காணலாம்.

கருவறைக்குச் செல்லும் வழியில் முகமண்டபத்தில் தூண் சிற்பங்கள் கருத்தைக் கவர்கின்றன. வலப் பக்கத்தூண் ஒன்றில், சிவலிங்கத்தை வழிபடும் கோலத்தில் ஆஞ்சநேயர் அருள்கிறார். அனுமன், சிவலிங்க வழிபாடு செய்த ஐந்து முக்கிய சிவத்தலங்களில், வடகுரங்காடு துறையும் ஒன்று. இந்தத் தூண் ஆஞ்சநேயர்- பிரார்த்தனா மூர்த்தியாகத் திகழ்கிறார். இவரிடம் என்ன நேர்ந்து கொண்டாலும், உடனடியாக நிறைவேற்றி வைப்பாராம்.

மூலவருக்கு எதிரில், நந்தி. வலப் பக்கம், பாதுகாப்பு அறை. இடப் பக்கத்தில் சாளரம் போன்ற அமைப்பு. இங்கு முற்காலத்தில் சுரங்கம் இருந்ததாம். தஞ்சாவூர் அரண்மனைக்கோ, தஞ்சை பெருவுடையார் கோயிலுக்கோ போகும் பாதையாக இருந்திருக்க வேண்டும் என்கிறார்கள். பிற்காலத்தில் இந்தச் சுரங்கத்தை மூடிவிட்டதாகச் சொல்கிறார்கள்.

வடகுரங்காடுதுறை தயாநிதீஸ்வரர் கோயில்
வடகுரங்காடுதுறை தயாநிதீஸ்வரர் கோயில்

கருவறையின் தெற்குக் கோஷ்டத்தில், விநாயகர்; அடுத்து தட்சிணாமூர்த்தி அருள்கிறார்கள். இந்த ஆலயத்தில் ஆதி மௌன குருவாக அமர்ந்திருக்கிறார் தட்சிணாமூர்த்தி. வழக்கமாக இவரின் காலடியில், சனகாதி முனிவர்கள் நால்வர் அமர்ந்து உபதேசம் கேட்பார்கள். இங்கு மேலும் நான்குபேர் உள்ளார்கள். அவர்கள் கந்தர்வர்களும் கிம்புருடர்களும் ஆவார்கள்.

பின்புறக் கோஷ்டத்தில் அர்த்தநாரீஸ்வரர் அருள்பாலிக்கிறார். வழக்கமாக இந்தக் கோஷ்டத்தில் லிங்கோத்பவர் இருப்பார். இப்படி அர்த்தநாரீஸ்வரர் இருப்பது அரிதானது.

வடக்குக் கோஷ்டத்தில் அருளும் அஷ்டபுஜ துர்கை பிரயோகச் சக்கரத்துடன் தரிசனம் தருகிறாள். சோழநாட்டுத் திருக்கோயில்கள் பலவற்றில், அஷ்ட புஜ துர்கையை, அதிலும் பிரயோகச் சக்கரம் தாங் கிய துர்கையைத் தரிசிக்கலாம். தங்களது படைத்தலைவியாகவே இத்தகைய துர்கையைச் சோழ மன்னர்கள் வழிபட்டுள்ளனர்

இங்கு அருளும் அம்பிகையின் திருநாமம் அருள்மிகு அழகுசடை முடியம்மை. நின்ற கோல நாயகியாக நான்கு திருக்கரங்களுடன் காட்சி தருகிறாள். ஜடாமகுடேஸ்வரி என்பது வடமொழிப் பெயர்.

அம்பாளும் பிரார்த்தனா சக்தி; கேட்டதெல்லாம் தருபவள். பிள்ளை வரம் வேண்டுபவர்கள் பௌர்ணமி நாள்களில், மடியில் பாலிகை கட்டி வந்து, அம்மனுக்கு மஞ்சள் மாலை சார்த்தினால், பிள்ளைப் பேறு ஸித்திக்கும்.

அதேபோல், அம்மனுக்கு மஞ்சள் இட்டு, மருதாணி அரைத்துப் பூசி, அவள் பெயரால் வருகிற பெண்களுக்கு மருதாணி அரைத்து இட்டால், தடைப்பட்ட திருமணங்கள் கூடி வரும் என்பது நம்பிக்கை.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *