தஞ்சாவூர்: வரும் 22ம் தேதி மைசூரில் நடைபெற உள்ள விவசாய சங்கங்களின் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழக விவசாயிகள் 20 பேர், தஞ்சாவூரில் உள்ள ராஜராஜசோழன் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பின் புறப்பட்டனர்.
தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநில விவசாய சங்கங்களின் தலைவர்கள் பங்கேற்கும் கூட்டம் நாளை மறுநாள் (அக்.22) மைசூரில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பதற்காக தமிழக காவிரி விவசாயிகள் சங்கப் பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் 20 விவசாயிகள், தஞ்சாவூரில் உள்ள ராஜராஜசோழன் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின் புறப்பட்டுச் சென்றனர்.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய பி.ஆர்.பாண்டியன், “மைசூரில் நடைபெற உள்ள கூட்டம் முழு வெற்றி பெறும். தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் சார்பில் 2018-ம் ஆண்டு முதல் ராசி மணல் அணை கட்டுவதற்காக பல்வேறு போராட்டங்களையும், இயக்கங்களையும் நடத்தி வருகிறோம். ராசி மணல் அணைக் கட்டுமான இடம் தமிழ்நாட்டுக்குச் சொந்தமானது என்பதை ஆதாரத்துடன் உறுதிப்படுத்தி, 2019-ம் ஆண்டு ராசி மணலில் அடிக்கல் நாட்டினோம். தொடர்ந்து தமிழ்நாடு அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி வருகிறோம்.
இந்நிலையில் கடந்த ஆக. 27-ம் தேதி தஞ்சாவூரில், கர்நாடகா, தமிழ்நாடு விவசாயிகள் முதல் கட்ட பேச்சுவார்த்தை நடத்தி சமூக தீர்வு எட்டுவதற்கான முயற்சியை மேற்கொண்டோம். அதனை தொடர்ந்து ராசிமணல் பகுதியை பார்வையிட்டு, கர்நாடக விவசாயிகள் அணை கட்டுவதற்கான சாதகமான சூழல் உள்ளதை உறுதி செய்தனர். இதனைத் தொடர்ந்து, மைசூரில் 2-ம் கட்டமாக, வரும் 22-ம் தேதி தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநில விவசாயிகள் சங்கத் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளோம்.
நாளை (அக்.21) தலைக்காவிரியில் நடைபெறும் பூஜையில் கலந்து கொண்டு, தொடர்ந்து கர்நாடகாவில் கட்டப்பட்டுள்ள பல்வேறு அணைகளையும் பார்வையிட்டு, 23-ம் தேதி மேகேதாட்டு பகுதியையும் பார்வையிட உள்ளோம். எங்களது பயண நோக்கத்தை உணர்ந்த தமிழக அரசு, அரசு ராசிமணல் அணை கட்டுமானத்தைக் கொள்கை ரீதியாக ஏற்றுக்கொண்டு வழக்குகள் முடிவுக்கு வரும் நிலையில் அணை கட்டுவது குறித்தான பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று உத்தரவாதம் அளித்து கடிதம் அளித்துள்ளதால் பயணம் முழு வெற்றி பெறும்” எனத் தெரிவித்தார்.