தடம்புரண்ட திரைக்கதை!

dinamani2F2025 09 282Fn8qchi6p2Fnewindianexpress2025 09 19a2qky2wzVijay campaign.avif
Spread the love

எதிர்பாராமல் நிகழ்ந்த விபத்து என்று கடந்து போக முடியவில்லை. முன்கூட்டியே எச்சரிக்கை செய்யப்பட்டும்கூட இப்படியொரு துயரம் நிகழ்ந்திருக்கிறது என்றால் அதற்குக் காவல் துறையையோ, அரசையோ குற்றம்சாட்டுவதில் அர்த்தமில்லை. காவல் துறையின் விதிமுறைகளுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தபோது பின்விளைவுகளை உணர்ந்து உயர்நீதிமன்றம் எச்சரித்திருக்கிறது எனும்போது, அதன் முழுப் பொறுப்பும் நடிகர் (தலைவர்) விஜய்யைத்தான் சாரும்.

சில மணி நேரத்துக்கு முன்பு நாமக்கல்லில் எந்த முகூர்த்தத்தில் “திமுகவுக்கும், அதிமுகவுக்கும் மக்களின் பாதுகாப்பில் அக்கறை இல்லை’ என்று விஜய் பேசினாரோ தெரியவில்லை, கரூரில் அவரே அந்தக் குற்றச்சாட்டுக்கு உள்ளாகி இருக்கிறார்; 40 அப்பாவிகளின் உயிரிழப்புக்கும் காரணமாகி இருக்கிறார். உயிரிழப்பின் அனுதாபத்தை விஞ்சுகிறது, துயரத்துக்குக் காரணமானவர்கள் மீதான ஆத்திரம்.

PTI09 28 2025 000072A

நாமக்கல் கூட்டத்திலேயே பிரச்னை தொடங்கி இருக்கிறது. சனிக்கிழமை காலை 9 மணிக்கே ஆரம்பிக்க வேண்டிய பிரசாரத்துக்காக ரசிகர்களும் தொண்டர்களும், பொதுமக்களும் அதிகாலையிலிருந்து காத்திருந்திருக்கிறார்கள். ஏறத்தாழ 8 மணி நேரம் அவர்களைக் காக்க வைத்தபிறகு, கொளுத்தும் வெயிலில் பிற்பகல் 2.30 மணி அளவில்தான் தனது பிரசாரத்தைத் தொடங்கி இருக்கிறார் நடிகர் (தலைவர்) விஜய்.

தனக்காக மக்கள் பெருமளவில் காத்திருந்தார்கள் என்கிற தோற்றத்தை ஏற்படுத்த அவர் முன்னெடுத்த உத்தியால், பலர் மயக்கமடைந்திருக்கிறார்கள். ஏறத்தாழ 15 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அப்போதே விஜய்யும், ஏனைய நிர்வாகிகளும் விழித்துக் கொண்டு அடுத்தகட்ட பிரசாரமான கரூரில் முன்னேற்பாடுகளைச் செய்திருக்க வேண்டும்.

கரூரில்கூட மதியம் வந்துவிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நடிகர் (தலைவர்) விஜய் இரவு 7.40 மணிக்குத்தான் வந்திருக்கிறார். கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்ததும், அருகிலிருந்த மரங்கள், கட்டடங்களில் பலர் ஏறி நின்றதும் கடும் நெருக்கடிகளை ஏற்கெனவே ஏற்படுத்தி இருந்தது. மரங்களின் கிளைகள் முறிந்து விழுந்திருக்கின்றன.

PTI09 28 2025 000071A

தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் பெண்கள், குழந்தைகளால் நெரிசலைத் தாக்குப்பிடிக்க முடியாததில் வியப்பில்லை. தண்ணீர் வேண்டும் என்று கேட்ட ரசிகர்களுக்கு நடிகர் (தலைவர்) விஜய் தண்ணீர் பாட்டில்களை எடுத்து நாய்க்கு ரொட்டித் துண்டு போடுவதுபோல வீச, அதைப் பிடிக்க ரசிகர்கள் முண்டியடித்தது விபரீதத்துக்குப் போடப்பட்ட அச்சாரம்.

திருச்சியிலும், நாகப்பட்டினத்திலும் எதிர்கொண்ட பிரச்னைகளின் பின்புலத்தில் தனது அடுத்தடுத்த பிரசாரக் கூட்டங்களை விஜய் திட்டமிடத் தவறினார். கேமரா வெளிச்சத்திலும் விளம்பர வெளிச்சத்திலும் தனது குழந்தைப் பருவம் தொடங்கி வளர்ந்த விஜய்க்கு நடைமுறை எதார்த்தமும், அரசியல் அனுபவமும் இல்லாததன் விளைவுதான் பல அப்பாவிகளின் உயிரிழப்புக்குக் காரணமாகி இருக்கிறது.

எம்ஜிஆருக்காக மணிக்கணக்காக அல்ல, நாள்கணக்காக மக்கள் இரவும், பகலும் காத்திருந்திருக்கிறார்கள். அப்போது இதுபோல எந்தவொரு பெரிய விபத்தும் ஏற்படவில்லை. அதற்குக் காரணம், அவர் சார்ந்த கட்சி அமைப்பு ரீதியாக வலுவாக இருந்தது. கிராமங்கள் வரையில் அரசியல் அனுபவம் உள்ள கட்சித் தலைவர்களும், தொண்டர்களும் கூட்டத்தைக் கட்டுப்படுத்தி, பிரசாரத்தை வெற்றிகரமாக முன்னெடுத்து, வாக்குகளாக மாற்றும் வித்தையை கற்றுத் தேர்ந்திருந்தார்கள்.

PTI09 28 2025 000205B

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் அவரது திரைப்பட செல்வாக்கை மட்டுமே நம்பித் தொடங்கப்பட்டிருக்கும் அரசியல் அமைப்பு. “விஜய்க்கு ஐடியாவும் இல்லை, ஐடியாலஜியும் இல்லை’ என்று ஏனைய அரசியல் கட்சியினர் விமர்சிப்பதில் உண்மை இருக்கிறது. கார்ப்பரேட் பாணியில் பல கோடி ரூபாய் செலவழித்துத் திரைப்படங்களை விளம்பரப்படுத்தி வெற்றி அடைவதுபோல, அரசியல் வியாபாரமும் நடத்தலாம் என்று அவர் முனைந்ததன் விளைவுதான் கரூரில் அரங்கேறியிருக்கும், தமிழகத்துக்குத் தலைக்குனிவை ஏற்படுத்தியிருக்கும் நெரிசல் உயிரிழப்புகள்.

இந்தியாவுக்குக் கூட்ட நெரிசலும் உயிரிழப்புகளும் புதிதல்லதான். இதுவரையில் திருவிழாக்களிலும், விளையாட்டுப் போட்டிகளிலும், விபத்துகளிலும் அவ்வப்போது ஓரிரு திரைப்பட வெளியீட்டு நிகழ்வுகளிலும்தான் விபத்துகள் நிகழ்ந்திருக்கின்றன. அரசியல் பொதுக்கூட்டங்களில் அரிதாகவே நெரிசல் மரணங்கள் ஏற்பட்டிருக்கின்றன.

தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின்படி, 1996-க்கும் 2002-க்கும் இடையே இந்தியாவில் 3,935 நெரிசல் சம்பவங்களில் மூவாயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்திருக்கிறார்கள். ஆனால், இதுவரையில் அரசியல் பிரசாரத்தில் 40 பேர் உயிரிழந்திருப்பது நடிகர் விஜய்யின் பிரசாரத்தில்தான். இதையும்கூட அவரது ரசிகர்கள் சாதனையாகக் கருத மாட்டார்கள் என்று நம்புவோம்.

உயர்நீதிமன்றத்தில் த.வெ.க. தாக்கல் செய்த மனுவின் மீதான தீர்ப்பில், நீதிபதி எஸ்.சதீஷ்குமார் எழுப்பிய நியாயமான கேள்விகளுக்கு இப்போது நடிகர் (தலைவர்) விஜய் பதில் சொல்லக்கடமைப்பட்டிருக்கிறார். “”பொதுக்கூட்டம் நடத்தினாலும் சட்டத்துக்கு உள்பட்டுத்தான் நடத்த வேண்டும். தலைவர்கள்தான் கூட்டத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். அசம்பாவிதம் ஏற்பட்டால் யார் பொறுப்பேற்பது?” உள்ளிட்ட நீதிபதியின் கேள்விகள் நடிகர் (தலைவர்) விஜய்யை இப்போது குற்றவாளிக் கூண்டில் நிறுத்தியிருக்கிறது.

ஆளும்கட்சியும், அரசும், காவல் துறையும் அனுமதி மறுத்தால் அதைத் தனக்கு எதிரான அரசியல் சதி என்றுகூறி நடிகர் (தலைவர்) விஜய் அனுதாபம் தேட விழைந்தார். அனுமதி வழங்கினாலோ, கட்டுப்படுத்த முடியாத கூட்டத்தைக்கூட்டி இதுபோன்ற அசம்பாவிதங்களுக்கு வழிகோலுகிறார். பெரிய கூட்டத்தைக் கூட்டி தனது

செல்வாக்கை நிலைநாட்டும் விஜய்யின் அரசியல் உத்திக்கு அப்பாவிகள் பலர் பலியாகும் பரிதாபத்தை என்னவென்று சொல்ல? மத்திய பாஜக அரசிடம் கேட்டுப் பெற்ற சிறப்புப் பாதுகாப்பு போதாதென்று, தனக்கெனத் தனியாக பாதுகாப்புப் படையையும் வைத்துக் கொண்டு தனது பாதுகாப்பில் கவனமாக இருக்கும், புதிதாக அரசியல் களம் காணும் அந்த நடிகருக்கு (தலைவருக்கு) தனது ரசிகர்களுக்கும், தொண்டர்களுக்கும் பொதுமக்களுக்கும் தனக்கு வழங்கியிருப்பதுபோலப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்கிற அக்கறை ஏன் இல்லாமல் போனது?கூட்டத்தைக் கூட்டுபவர்கள் மக்களது பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் கடமைப்பட்டவர்கள்.

ஆபத்தை ஏற்படுத்தும் வகையிலான பேரணிகளையும், பொதுக்கூட்டங்களையும் தடை செய்ய வேண்டிய காலம் வந்துவிட்டது. நடிகர் (தலைவர்) விஜய்யின் ஒரு திரைப்பட நடிப்புக்கான ஊதியம் ரூ.100 கோடிக்கு மேல் என்கிறார்கள். ஆனால், அவருக்காக உயிரிழந்தவர்களின் உயிருக்கு அவர் நிர்ணயித்திருக்கும் விலை வெறும் தலா ரூ.20 லட்சம் மட்டுமே…

சிலப்பதிகாரத்தின் பாயிர வரிகள் நடிகர் (தலைவர்) விஜய்க்கு தெரிந்திருக்க நியாயம் இல்லை – அரசியல் பிழைத்தோருக்கு அறம் கூற்றாகும்!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *