இந்தியாவின் மிகப்பெரிய விமான நிறுவனங்களில் ஒன்றாக விளங்குகிறது இண்டிகோ நிறுவனம். உள்நாடு மற்றும் சர்வதேச அளவில் நாளொன்றுக்கு 2200க்கும் மேலான விமானங்களை, இண்டிகோ இயக்கி வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக, அந்த நிறுவனம் விமானம் ரத்து, விமானம் தாமதம் என தீவிர பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகிறது.
தொழில்நுட்ப கோளாறுகள், மோசமான வானிலை உள்ளிட்டவை இந்த குழப்பத்திற்கு காரணமாக கூறப்பட்டாலும், சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் அண்மையில் அறிமுகப்படுத்திய FDTL எனப்படும் “விமான கடமை நேர வரம்பு” விதிமுறை முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
இண்டிகோ விமானச் சேவை கடந்த சில நாள்களாக பாதிக்கப்பட்டுள்ளது. தில்லியில் 95 விமானங்கள், மும்பையில் 85 விமானங்கள், ஹைதராபாதில் 70 விமானங்கள், பெங்களூருவில் 50 விமானங்கள் வியாழக்கிழமை ஒரே நாளில் ரத்து செய்யப்பட்டன.
இதேபோல், தமிழகத்தில் உள்ள சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களில் இருந்து இயக்கப்படும் பெரும்பாலான இண்டிகோ விமானங்கள் வியாழக்கிழமை ரத்து செய்யப்பட்டன.
இந்த நிலையில், சென்னை விமான நிலையத்துக்கு வியாழக்கிழமை நள்ளிரவு முதல் வருகை தரவேண்டிய மற்றும் புறப்பட வேண்டிய 65 இண்டிகோ விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதனிடையே, விமான நிலையத்துக்குள் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில், இண்டிகோ விமானப் பயணிகளை நிலையத்துக்குள் அனுமதிக்க வேண்டாம் என்று அந்நிறுவனம் பாதுகாப்புப் படையிடம் கேட்டுக் கொண்டுள்ளது.
இதனால், விமானப் பயணிகள் நுழைவு வாயிலிலேயே தடுத்து நிறுத்தப்பட்டதால் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
