ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள புகழ்பெற்ற “தி ராக்ஸ்’ பகுதியில் அமைந்துள்ள ஒரு சொகுசு உணவகத்தில், கற்பனை செய்து பார்க்க முடியாத ஒரு மோசடி அரங்கேறியுள்ளது. ஒரு நபர் தனது குடும்பத்தினருடன் அந்த உணவகத்திற்குச் சென்று, இந்திய மதிப்பில் சுமார் 30,000 ரூபாய்க்கும் மேல் மதிப்புள்ள விலையுயர்ந்த உணவுகளை ஆர்டர் செய்து மிகவும் ருசித்துச் சாப்பிட்டார். அவரின் பில்லில் அந்த உணவகத்தின் மிகச் சிறந்த உணவாகக் கருதப்படும் ‘டோமாஹாக் ஸ்டீக்’ (Tomahawk steak) மற்றும் மதுபானங்களும் அடங்கும்.
சாப்பிட்டு முடித்த பின், பில் தொகையைச் செலுத்த வேண்டிய நேரத்தில் அந்த நபர் திடீரென ஒரு நாடகத்தை அரங்கேற்றினார். தான் சாப்பிட்ட தட்டில் முடி இருப்பதாகக் கூறி, உணவக ஊழியர்களிடம் ஆவேசமாக வாக்குவாதம் செய்தார். உணவின் தரம் மிகவும் மோசமாக இருப்பதாகவும், தன்னால் பணம் செலுத்த முடியாது என்றும் கூறிவிட்டு, தனது குடும்பத்துடன் அங்கிருந்து வெளியேறத் தொடங்கினார். ஊழியர்கள் எவ்வளவோ சமாதானம் செய்தும், அவர் மிகவும் கண்ணியமற்ற முறையில் பேசிவிட்டு அங்கிருந்து கிளம்பினார்.
இருப்பினும், அந்த நபரின் நடவடிக்கையில் சந்தேகம் கொண்ட உணவக நிர்வாகம், உடனடியாக சிசிடிவி (CCTV) காட்சிகளை ஆய்வு செய்தது. அப்போதுதான் அந்த அதிர்ச்சிகரமான உண்மை வெளிச்சத்திற்கு வந்தது. யாரும் கவனிக்காத நேரத்தில், அந்த நபர் தனது சட்டைக்குள் கையை விட்டு, தனது அக்குள் முடியைப் பிடுங்கி, அதை உணவில் போட்டது கேமராவில் மிகத் தெளிவாகப் பதிவாகியிருந்தது. இலவசமாகச் சாப்பிடுவதற்காக அந்த நபர் இவ்வளவு அருவருப்பான செயலில் ஈடுபட்டதைக் கண்டு உணவக உரிமையாளர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.