தனிச்சந்நிதியில் தோஷம் தீர்க்கும் சனிபகவான்! விருதுநகர் மாவட்டம், சாத்தூர் ஸ்ரீசிதம்பரேஸ்வரர் கோயில்

Spread the love

பொதுவாக ஆலயங்கள் சுயம்புவாக வெளிப்பட்டவை; தேவர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்டவை; ரிஷிகளால் பிரதிஷ்டை செய்யப்பட்டவை; மன்னர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்டவை எனப் பல வகைப்படும். அவற்றில் இறைவன் தானே சுயம்புவாக வெளிப்பட்ட தலங்களை சுயம் வியக்த க்ஷேத்திரம் (ஸ்வயம் வியக்தம்) என்று அழைக்கப்பார்கள். ‘வியக்தம்’ என்றால் வெளிப்படுதல்; ‘ஸ்வயம்’ என்றால் தானாகவே என்று பொருள். மற்ற அனைத்து ஆலயங்களையும் விட இப்படிப்பட்ட சுயம்புவாக வெளிப்பட்ட திருமேனிகள் மிகவும் சக்தி வாய்ந்தவை என்பது நம்பிக்கை. வாழ்வில் அப்படிப்பட்ட ஆலயங்களை நாம் தேடிச் சென்று தரிசனம் செய்ய வேண்டும். அப்படி ஒரு ஆலயம்தான் விருதுநகர் மாவட்டம், சாத்தூரின் தென்பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீசிதம்பரேஸ்வரர்-ஸ்ரீசிவகாமசுந்தரி அம்பாள் திருக்கோயில்.

சாத்தூர் ஸ்ரீசிதம்பரேஸ்வரர் கோயில்

இந்த ஆலயத்தின் தலவரலாறு சுவாரஸ்யமானது. முன்னொரு காலத்தில் இந்தப் பகுதியை பாண்டிய மன்னர்கள் ஆட்சி செய்தனர். அவர்களில் ஒருமன்னன் நந்தவனம் அமைத்து இறைவனுக்கு சமர்பித்து வழிபாடுகள் செய்துவந்தான். ஒருமுறை அவன் நாட்டில் மழை பொய்த்தது. நீர் நிலைகள் வறண்டது. செடிகொடிகளும் வாடின. எனவே பூஜைக்கு மலர்கள் கிடைப்பது அரிதானது.

ஆனால் ஒரு அரளிச்செடி மட்டும் பூத்தவண்ணம் இருந்தது. பொதுவாகவே அரளிச்செடிகளுக்கு நிறைய நீர் தேவையில்லை. எனவே அவை தொடர்ந்து பூக்களைப் பூத்தவண்ணம் இருக்க அந்தப் பூக்களைக் கொண்டு மன்னன் பூஜைகள் செய்தான்.

ஒருநாள், பூஜை முடிந்ததும் அர்ச்சனை செய்த பூக்களில் ஒன்றை எடுத்துக் கண்களில் ஒற்றிக்கொண்டு இறைவனை மனதார வணங்கினார் மன்னர். அப்போது, அந்தப் பூவில் மறைந்திருந்த எறும்பு ஒன்று மன்னரின் இமையைக் கடித்துவிட்டது.

வலியால் துடிதுடித்த மன்னர், உணர்ச்சிவேகத்தில், ‘செவ்வரளிச் செடியில் இருந்து வந்த எறும்புதான் என்னைக் கடித்திருக்க வேண்டும். உடனடியாக அந்த மரத்தை வெட்டி எறியுங்கள்’ என்றான். அதன்படி பணியாள்கள் உடனடியாக அரளிச் செடியை வெட்டினர்.

ஆனால் அனைவரும் வியக்கும் வண்ணம் ஓர் அதிசயம் நிகழ்ந்தது. செடியை வெட்டியதும் அதில் இருந்து ரத்தம் பீறிட்டது. இதைக்கண்டு பயந்த பணியாளர்கள் மன்னரிடம் ஓடிச் சென்று தகவல் சொல்லினர்.

மன்னன் ஓடிவந்தான். தன் தவறுக்கு வருந்தினான்.கைகூப்பி வணங்கி, ‘பூஜைக்குப் பூ தரும் செடியை வெட்டச் சொன்னது தவறுதான்’ என்று இறைவனிடம் மன்னிப்பு வேண்டினான்.

அடுத்த கணம் அந்த இடத்தில் நடராஜப் பெருமான் காட்சி அளித்தார். தான் அங்கே கோயில்கொள்ள விரும்புவதாகவும் தனக்கு அங்கே ஓர் ஆலயம் அமைக்குமாறும் வேண்டினார். அங்கு அமைந்திருக்கும் ஈசனும் சுயம்புவாக வெளிப்பட்டவர் என்கிறார்கள். தில்லையம்பல நடராஜராக ஈசன் அங்கே தோன்றியதால், மூலவருக்கு அருள்மிகு ஸ்ரீசிதம்பரேஸ்வரர் காட்சி அருள்கிறார்.

சாத்தூர் ஸ்ரீசிதம்பரேஸ்வரர் கோயில்

சந்நிதிச் சிறப்புகள்

சுமார் 900 ஆண்டுகள் பழைமையான இவ்வாலயத்தை நிர்மாணித்த மன்னரின் பெயர் தெரியவில்லை. எனினும்,

பிற்காலத்தில், இவ்வாலயத்துக்கு, பாண்டிய மன்னர்கள் பலரும் திருப்பணி செய்திருக்கிறார்கள் என்பதை அறியமுடிகிறது. அதற்கு அத்தாட்சியாக ஆலயத் தூண்களில் மீன் சின்னங்களைக் காண முடிகிறது.

இந்த ஆலயத்தில், கிழக்கு நோக்கி அருள்கிறாள், அன்னை ஸ்ரீசிவகாமசுந்தரி. ஸ்தல விருட்சம் வில்வ மரம். இந்த ஆலயத்தில் சேக்கிழார், அறுபத்து மூவர், நால்வர் பெருமக்கள் ஆகியோரையும், சரஸ்வதி, துர்கை, மகாலட்சுமி ஆகிய முப்பெருந்தேவியரையும் தரிசிக்கலாம். மேலும், கோயிலின் கன்னி மூலையில் பிள்ளையாரும், அருகிலேயே சுவாமி ஐயப்பனும், வாயு மூலையில் தேவியருடன் சுப்ரமணியரும், ஈசான்ய மூலையில் பைரவரும் சந்நிதி கொண்டிருக்கிறார்கள்.

பிராகார வலம் வரும்போது, தட்சிணாமூர்த்தி மற்றும் சனீஸ்வரரை தனிச்சந்நிதிகளில் தரிசிக்கலாம். சிவனார் சந்நிதிக்கு எதிரில் வலப்புறம் சூரியனும், இடப்புறம் சந்திரனும் அமைந்துள்ளனர். இக்கோயிலின் சண்டிகேஸ்வரர், மேடைமீது தெற்கு நோக்கியபடி அமர்ந்திருப்பது விசேஷ அம்சம் என்கிறார்கள்.

கோயில் கொடிமரத்தின் அடிப்பாகம் தாமரை வடிவில் அமைந்திருப்பதும், தூண்களில் வாழைப்பூ மற்றும் சிம்ம முக வடிவங்கள் அமைந்திருப்பதும் நம் கண்ணையும் கருத்தையும் கவர்கின்றன.

சாத்தூர் ஸ்ரீசிதம்பரேஸ்வரர் கோயில்

பிரார்த்தனைச் சிறப்புகள்

இந்தக் கோயிலின் பள்ளியறை பூஜையில் கலந்துகொண்டு வழிபட்டால், கல்யாண வரமும் குழந்தை பாக்கியமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

நவராத்திரி, பெரிய கார்த்திகை, வைகாசி விசாகம், மாசி மாதம் மகா சிவராத்திரி ஆகிய வைபவங்கள் இங்கே வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. இவற்றில் கலந்துகொண்டு இறையனாரைத் வழிபட்டுவந்தால், நம் சிந்தை மகிழ வரம் தருவார் சிதம்பரேஸ்வரர்.

மேலும், நாள்தோறும் இரவு 8 மணிக்கு இந்தக் கோயிலில் நடைபெறும் பள்ளியறை பூஜையில் கலந்துகொண்டு ஸ்வாமியைத் தரிசித்து வழிபடுவதைப் பெரும் பாக்கியமாகக் கருதுகிறார்கள் பக்தர்கள். இந்த வைபவத்தைத் தரிசித்து வழிபட்டு வந்தால், குழந்தை வரம், கல்யாணப்பேறு, குடும்ப ஒற்றுமை, மனச்சாந்தி ஆகியவை கிடைக்கும் என்பது அவர்களது அசைக்கமுடியாத நம்பிக்கை

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *