தனியார் பள்ளிகளின் தற்காலிக அங்கீகாரத்துக்கான புதிய விதிகளுக்கு எதிராக வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு  | Case challenging Provisional Recognition Act for private schools: TN govt ordered to respond

1308907.jpg
Spread the love

சென்னை: தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு தற்காலிக அங்கீகாரம் வழங்கும் தமிழக அரசின் புதிய சட்ட விதிகளை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை 4 வார காலத்தில் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், இதுதொடர்பாக அகில இந்திய தனியார் பள்ளிகள் சங்கத்தின் தலைவர் பி.டி.அரசகுமார் மற்றும் சங்க பொதுச் செயலாளர் பழனியப்பன் ஆகியோர் தாக்கல் செய்திருந்த மனுவில், “தமிழக அரசு தனியார் பள்ளிகள் ஒழுங்குமுறை சட்டம் -2023-ல் பல்வேறு திருத்தங்களை கடந்த ஜனவரி மாதம் கொண்டு வந்துள்ளது. அதில் தனியார் பள்ளிகளுக்கான அங்கீகாரம் என்பது குறிப்பிட்ட காலத்துக்கு மட்டும் எனக்கூறி காலவரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் உள்ளாட்சி அமைப்புகளிடம் அனுமதி பெற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.தனியார் பள்ளிகளுக்கான சட்டத்தில் இல்லாத விதிகளை தமிழக அரசு புதிதாக கொண்டு வந்துள்ளது. பள்ளிகளுக்கு வழங்கப்படும் அங்கீகாரம் என்பது தற்காலிகமானதல்ல, அது நிரந்தரமானது. தனியார் பள்ளிகள் முறையாக செயல்படுவதை கண்காணிக்கவும், விதிமீறல்களை தடுக்கவும் சட்டத்தில் புதிதாக விதிகளை கொண்டு வந்திருப்பதாக தமிழக அரசு தெரிவித்தாலும் தவறு செய்யும் பள்ளிகளின் அங்கீகாரத்தை திரும்பப்பெற ஏற்கெனவே சட்டத்தில் இடம் உள்ளது.

கடந்த 1994-ம் ஆண்டு தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணையில் நிரந்தர அங்கீகாரம் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஆனால் அந்த அரசாணைப்படி நிரந்தர அங்கீகாரம் வழங்கவில்லை. அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றமும் அந்த அரசாணையை அமல்படுத்த உத்தரவிட்டது. தற்போது தமிழக அரசு தனியார் பள்ளிகளுக்கான அங்கீகாரம் தொடர்பாக கொண்டு வந்தள்ள புதிய சட்டவிதிகள் சட்டவிரோதமானது. தன்னிச்சையானது. நடைமுறையில் சாத்தியமற்றது. எனவே தமிழக அரசின் இந்த புதிய சட்ட விதிகளை அமல்படுத்த தடை விதிக்க வேண்டும்,” எனக் கோரியிருந்தனர்.

இந்த வழக்கின் விசாரணை பொறுப்பு தலைமை நீதிபதி டி. கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பி.பி.பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.குமார் ஆஜராகி வாதிட்டார். இதையடுத்து நீதிபதிகள், இதுதொடர்பாக தமிழக அரசு மற்றும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் 4 வார காலத்தில் பதிலளிக்க வேண்டும், என உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *