தனி தீர்மானம்: `வாழ்வாதாரத்தை வேரறுக்கும் முடிவு; மகாத்மா பெயரிலேயே திட்டம் தொடர வேண்டும்’ ஸ்டாலின்

Spread the love

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் தொடர்பான மாநில அரசின் தனித் தீர்மானத்தை, முதலமைச்சர் ஸ்டாலின் முன்மொழிந்தார். அதைத் தொடர்ந்து உரையாற்றிய அவர், “மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியா முழுவதிலும் உள்ள கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை, மாநிலங்களின் நிதி கட்டமைப்பை, உள்ளாட்சி அமைப்புகளின் சுய சார்புத் தன்மையை, கிராமப்புற மகளிருக்கான வேலைவாய்ப்பைக் குலைக்கும் வண்ணம் ஒன்றிய அரசு அண்மையில் நிறைவேற்றியுள்ள மகாத்மா காந்தி ஊரக உறுதித் திட்டத்திற்கு மாற்றாக கொண்டுவந்துள்ள புதிய திட்டம் குறித்து இந்தப் பேரவையில் தங்கள் அனுமதியோடு சில முக்கிய விவரங்களை தெரிவிக்க விரும்புகிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, தமிழ்நாட்டில், உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தும் திட்டமாக இருந்தாலும், நலிவுற்ற மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் திட்டமாக இருந்தாலும், அனைத்து திட்டங்களும் இது மாநில அரசின் திட்டம், ஒன்றிய அரசின் திட்டம் என்ற பாகுபாடு இல்லாமல் திறம்பட செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒன்றிய அரசின் பல முன்னோடித் திட்டங்களில் இந்திய அளவில், தமிழ்நாடு அரசின் செயல்பாடுகள் முதன்மையாக இருப்பதோடு, பல்வேறு ஒன்றிய அமைச்சகங்களின் பாராட்டுக்களையும் தொடர்ந்து பெற்றுவருகின்றது. இருப்பினும், ஒன்றிய அரசு, தமிழ்நாட்டை வஞ்சிப்பதையே கொள்கையாகக் கொண்டுள்ளது என்பதை நாம் தொடர்ச்சியாகக் கண்டு வருகிறோம்.

100 நாள் வேலைத்திட்டம்

100 நாள் வேலைத்திட்டம்
சி.கோபிநாத்

எந்தவொரு ஒன்றிய அரசின் திட்டமானாலும், பணி முன்னேற்றத்திற்கு ஏற்ப நிதி விடுவிப்பதை செய்யாமல் உடனடியாக நிதி விடுவிப்பதை வேண்டுமென்றே தவிர்த்து, காலதாமதத்தை ஏற்படுத்தி, தமிழ்நாட்டின் வளர்ச்சியில் மாற்றாந்தாய் மனப்பான்மையோடு ஒன்றிய அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்திலும், கடந்த ஆண்டுகளை ஒப்பிடுகையில், 2025-2026 ஆம் ஆண்டில் தொழிலாளர் மதிப்பீடு மற்றும் நிதி ஒதுக்கீடு மிகவும் குறைவாகவே வழங்கப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் ரூ.1,026 கோடி ஊதியத்திற்கான தொகையும், ரூ.1,087 கோடி பொருட்கூறுக்கான தொகையும் இன்றுவரை விடுவிக்கப்படாமலேயே உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இதே நிலைதான். வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் உயிர் நீர்த் திட்டத்திலும் இதுவரை ரூ.3,112 கோடி நிதி விடுவிக்கப்படாமல் பல மாதங்களாக நிலுவையில் உள்ளது. பிரதம மந்திரி கிராமச் சாலை திட்டத்தில் ரூ.516 கோடி இன்னும் நிதி விடுவிக்கப்படாமல் உள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *