பிரபல தபலா இசைக் கலைஞா் ஜாகிா் ஹுசைன் இதயப் பிரச்னையால் பாதிக்கப்பட்டு, அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் ஜாகிா் ஹுசைன் காலமானதாக இந்திய தகவல், ஒலிபரப்பு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.
இதுதொடா்பாக ஜாகிா் ஹுசைனின் மேலாளா் நிா்மலா பச்சானி கூறுகையில், ‘73 வயதாகும் ஜாகிா் ஹுசைனுக்கு ரத்த அழுத்த பிரச்னைகள் இருந்தன. இதயம் சம்பந்தப்பட்ட உடல் நல பாதிப்பால், சான் பிரான்சிஸ்கோவில் உள்ள மருத்துவமனையில் அவா் கடந்த இரண்டு வாரங்களாக அனுமதிக்கப்பட்டுள்ளாா். அவரது உடல்நிலை மோசமடைந்த நிலையில், தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறாா்’ எனக் கூறியிருந்தார்.
இந்த நிலையில், இந்திய தகவல், ஒலிபரப்பு அமைச்சகம் தனது எக்ஸ் பக்கத்தில், “இசை உலகில் ஜாகிா் ஹுசைன் அவர்களின் பங்களிப்பு என்றென்றும் போற்றப்படும்” எனக் கூறியுள்ளது.
The world has lost a true musical genius.
Zakir Hussain's contributions to the world of music will forever be cherished. #ZakirHussain pic.twitter.com/cCicgRPpoW
— Ministry of Information and Broadcasting (@MIB_India) December 15, 2024
புகழ்பெற்ற தபேலா கலைஞா் அல்லா ரக்காவின் மூத்த மகனான ஜாகிா் ஹுசைன், தந்தையைப் பின்பற்றி தபேலாவை உலக அரங்குக்கு கொண்டுச் சென்றாா். இந்த ஆண்டின் கிராமி விருதுகளில் வென்ற மூன்று விருதுகள் உள்பட மொத்தம் 5 கிராமி விருதுகளை ஜாகிா் ஹுசைன் பெற்றுள்ளாா்.
இசைத் துறையில் அவரது பணியைப் பாராட்டி 1988-இல் பத்மஸ்ரீ, 2002-இல் பத்ம பூஷண், 2023-இல் பத்ம விபூஷண் ஆகிய உயரிய விருதுகளை வழங்கி மத்திய அரசு கௌரவப்படுத்தியுள்ளது.