“தப்பான கணக்கும் அல்ல; அச்சுப் பிழையும் அல்ல" – தங்கமணிக்கு அமைச்சர் கோவி.செழியன் பதில்!

Spread the love

சட்டமன்றக் கூட்டத்தொடர் மூன்றாவது நாளாக இன்று (ஜன.22) கூடியது.

இந்தக் கூட்டத்தொடரில் உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன், புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் திட்டங்கள் தொடர்பாக தங்கமணி பேசியதற்கு, “தப்பான கணக்கும் அல்ல, அச்சுப் பிழையும் அல்ல,1,831 கோடி ரூபாய் என்பது சரியான கணக்கே” என்று பதிலுரை அளித்திருக்கிறார்.

புதுமைப் பெண் திட்டம்
புதுமைப் பெண் திட்டம்

அதாவது, “மாண்புமிகு உறுப்பினர் திரு.தங்கமணி அவர்கள் பேசும்போது, ஆளுநர் உரையில் குறிப்பிடப்பட்ட, புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் திட்டங்களின் பயனாளிகள் பற்றிய விவரம் தவறாக தெரிவதாகவும், 12 இலட்சம் பயனாளிகளுக்கு 5 ஆண்டுகளுக்கு தலா ஆண்டுக்கு 12 ஆயிரம் செலவழித்தால், 720 கோடி ரூபாய் மட்டுமே தேவைப்படும் என்றும், ஆளுநர் உரையில் அது 1,831 கோடி ரூபாய் என்று குறிப்பிடப்பட்டுள்ளது சரியா என்றும் ஒரு கேள்வியை எழுப்பினார்.

இதுகுறித்து நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். இந்த இரண்டு திட்டங்களின் கீழ் தகுதிவாய்ந்த பயனாளிகளுக்கு மாதந்தோறும், அவர்கள் படிக்கும் கல்லூரிக் காலம் முழுவதற்கும் ஆயிரம் ரூபாய் அளிக்கப்படுகின்றது.

அதாவது, ஒருவர் கல்லூரியில் சேரும்போது அளிக்கப்படும் இந்தத் தொகை மூன்று ஆண்டுகள் முதல் ஐந்து ஆண்டுகள் வரை மாதந்தோறும் அளிக்கப்படுகிறது.

சட்டமன்ற உறுப்பினர் தங்கமணி
சட்டமன்ற உறுப்பினர் தங்கமணி

ஆளுநர் உரையில் குறிப்பிடப்பட்டுள்ள 12 இலட்சம் பயனாளிகள் என்பது, இந்தத் திட்டத்தின் கீழ் பயனடைந்த மாணவ, மாணவியர்களின் எண்ணிக்கை. இந்தத் திட்டங்களின் முதல் மாதத்திலிருந்து இப்பயனாளிகள், தாங்கள் கல்லூரியில் படிக்கக்கூடிய மூன்று முதல் ஐந்து ஆண்டுக் காலத்திற்கு, மாதந்தோறும் இந்தத் தொகையைப் பெற்று பயனடைந்திருக்கிறார்கள்.

எனவே, 12 இலட்சம் பயனாளிகளுக்கு தலா ஓராண்டு என்ற அடிப்படையில் கணக்கிட்டு, 720 கோடி ரூபாய் என்று மாண்புமிகு முன்னாள் அமைச்சர் அவர்கள் இங்கு தெரிவித்த கணக்கீடு சரியானதல்ல.

2022-2023 ஆம் ஆண்டு புதுமைப் பெண் திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து, அதன்கீழ் பயனடைந்த 6.95 இலட்சம் பயனாளி மாணவிகளும், 2024-2025 ஆம் ஆண்டு முதல் தொடங்கப்பட்ட தமிழ்ப் புதல்வன் திட்டத்தின்கீழ் பயனடைந்துள்ள 5.4 இலட்சம் மாணவர்களும், மேற்கூறியவாறு தாங்கள் படிக்கக்கூடிய கல்லூரிப் பருவம் முழுமைக்கும் மாதந்தோறும் இதுவரை பெற்றுள்ள தொகை 1,831 கோடி ரூபாய் என்பது சரியான கணக்கே ஆகும்.

மேலும், சொல்ல வேண்டுமென்றால், இந்தத் திட்டத்தின் செலவினங்கள் அனைத்தும், மத்திய கணக்காய்வுத் துறையால் ஆய்வு செய்யப்பட்டு, அந்தந்த நிதியாண்டிற்கான ஆய்வறிக்கைகள் இப்பேரவையில் வைக்கப்பட்டுள்ளன.

மாண்புமிகு உறுப்பினர் அவர்களுக்கு சந்தேகமிருந்தால், இந்த அறிக்கைகளில் கணக்கு விவரங்களை சரிபார்த்து உறுதி செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று பதிலுரை ஆற்றி இருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *