தமிழகத்தின் சி.பி.ராதாகிருஷ்ணனை அனைத்து கட்சிகளும் ஆதரிக்க வேண்டும்: அதிமுக, பாஜக வலியுறுத்தல் | All parties should support CP Radhakrishnan: ADMK, BJP

1373512
Spread the love

சென்னை: குடியரசு துணைத் தலை​வர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்​ட​ணி​யின் வேட்​பாள​ராக அறிவிக்​கப்​பட்​டுள்ள பாஜக​வின் மூத்த தலை​வரும், மகா​ராஷ்டிர மாநில ஆளுநரு​மான சி.பி.​ரா​தாகிருஷ்ணனை, அனைத்து தமிழக அரசி​யல் கட்​சிகளும் ஆதரிக்க வேண்​டுமென அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்​சிகளின் தலை​வர்​கள் வலி​யுறுத்​தி​யுள்​ளனர்.

இதுதொடர்​பாக அவர்​கள் வெளி​யிட்ட அறிக்​கை​:

அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி: தேசிய ஜனநாயக கூட்​ட​ணி​யின் குடியரசு துணைத் தலை​வர் வேட்​பாள​ராக அறிவிக்​கப்​பட்​டுள்ள சி.பி.​ரா​தாகிருஷ்ணனுக்கு வாழ்த்​துகள். இது அவரது பொது சேவைக்​கும், மக்​கள் மீதான அர்ப்​பணிப்​புமிக்க சமூக செயல்​பாடு​களுக்​கும் கிடைத்த மணிமகுட​மாகும். தமிழகத்​தைச் சேர்ந்த ஒரு​வரை குடியரசு துணைத் தலை​வர் வேட்​பாள​ராக அறி​வித்த பிரதமர் மோடிக்​கும், பாஜக தேசிய தலை​வருக்​கும் நன்றி. அனைத்து கட்சி உறுப்பினர்களும் சி.பி. ராதாகிருஷ்ணனை ஆதரிக்க வேண்டும்.

தமிழக பாஜக தலை​வர் நயி​னார் நாகேந்​திரன்: குடியரசு துணைத் தலை​வர் தேர்​தலில் தமிழக மண்​ணின் மைந்​தர் சி.பி.​ரா​தாகிருஷ்ணன் தேசிய ஜனநாயக கூட்​ட​ணி​யின் வேட்​பாள​ராக தேர்வு செய்​யப்​பட்​டிருப்​பது வரலாற்றுச் சிறப்​புமிக்க தருண​மாகும். ஒரு தமிழருக்கு கிடைக்​கும் மாபெரும் பெரு​மை​யை, அரசி​யல் எல்​லைகளைத் தாண்டி எல்​லோரும் ஆதரித்​தோம் என்று வரலாற்​றில் பேசப்​பட்​டால், அது ஆரோக்​கிய​மான அரசி​யலை ஊக்​குவிக்​கும். எனவே, கட்சி வித்​தி​யாசங்​களை தாண்​டி, அனைத்து உறுப்​பினர்​களும் சி.பி.​ரா​தாகிருஷ்ணனுக்கு ஆதரவு தரவேண்டும்.

பாமக தலை​வர் அன்​புமணி: பொது​வாழ்க்​கை​யில் எந்த காலத்​தி​லும், எந்த சர்ச்​சை​யிலும் சிக்​காதவர். மாநிலங்​களவையை வழிநடத்​திச் செல்​வதற்​கான அனைத்​துத் தகு​தி​களும், அனைத்​துக் கட்​சி​யினரை​யும் அரவணைத்து செல்​லும் திறனும் சி.பி.​ரா​தாகிருஷ்ணனுக்கு உண்​டு. குடியரசு துணைத் தலை​வர் பதவிக்கு பெருமை சேர்க்​கும் வகை​யில் அவர் செயல்​படு​வார் என்​ப​தில் எந்த ஐயமும் இல்​லை.

தமாகா தலை​வர் ஜி.கே.​வாசன்: சி.பி.​ரா​தாகிருஷ்ணன், அரசி​யலுக்கு அப்​பாற்​பட்டு அனை​வ​ராலும் நேசிக்க கூடிய​வர். தான் வகித்த அனைத்து துறை​களி​லும் தனி முத்​திரை பதித்​தவர். எனவே, தமிழகத்​தில் உள்ள அனைத்து அரசி​யல் கட்​சிகளும், தமிழகத்​துக்​கும், தமிழுக்​கும் பெருமை சேர்க்​கும் வகை​யில் அவரை ஆதரிக்க வேண்​டும்.

அமமுக பொதுச்​செய​லா​ளர் டிடிவி தினகரன்: நாட்​டின் மீதும் நாட்டு மக்​களின் மீதும் அளப்​பரிய அன்பு கொண்​டிருக்​கும் சி.பி.​ரா​தாகிருஷ்ணன், குடியரசு துணைத்​தலை​வ​ராகத் தேர்​வாகி மக்​கள் பணி​யைத் தொடர வாழ்த்​துகிறேன். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *