“தமிழகத்தின் ஜீவாதார உரிமையை விட்டுக் கொடுப்பது முதல்வர் ஸ்டாலினின் செயலற்றத்தன்மை” – இபிஎஸ் | Cauvery Water issue: EPS criticize TN CM MK Stalin

1278415.jpg
Spread the love

சென்னை: “தமிழகத்துக்கு காவிரியில் ஒரு டிஎம்சி வீதம் தண்ணீர் திறக்க வேண்டும் என்ற காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் உத்தரவை ஏற்க மறுக்கும் கர்நாடக அரசின் போக்கு கண்டனத்துக்குரியது. விளம்பர போட்டோ ஷூட்டில் மட்டுமே கவனம் செலுத்தும் திமுக முதல்வர், காங்கிரஸின் தயவுக்காக தமிழகத்தின் ஜீவாதார உரிமையை விட்டுக்கொடுப்பது அவரின் தொடர் செயலற்றத்தன்மை மூலம் தெளிவாகத் தெரிகிறது,” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சாடியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில், “கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு காவிரியில் நாளொன்றுக்கு ஒரு டிஎம்சி வீதம் ஜூலை 31 வரை தண்ணீர் திறந்துவிடவேண்டும் என்ற காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் உத்தரவை ஏற்க மறுக்கும் கர்நாடக காங்கிரஸ் அரசின் போக்கு கடும் கண்டனத்துக்குரியது. காவிரி ஆறு பாயும் மாநிலங்களின் எண்ணங்களை கருத்திற்கொண்டு பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவை கர்நாடக அரசு ஏற்காமல் முரண்டு பிடிப்பது ஏற்கத்தக்கதல்ல.

விளம்பர போட்டோ ஷூட்டில் மட்டுமே கவனம் செலுத்தும் திமுக முதல்வர், காங்கிரஸின் தயவுக்காக தமிழகத்தின் ஜீவாதார உரிமையை விட்டுக்கொடுப்பது அவரின் தொடர் செயலற்றத்தன்மை மூலம் தெளிவாகத் தெரிகிறது. மேடையில் மட்டும் மாநில உரிமை பற்றி வாய் கிழிய பேசும் திமுக அரசின் முதல்வர் தன்னுடைய செயலற்ற தன்மையால், தமிழக மக்களின் வாழ்வோடு விளையாடி வருவது கடும் கண்டனத்துக்குரியது.

டெல்டா விவசாயிகள் நலனைக் கருத்தில்கொண்டு உடனடியாக காவிரி விவகாரத்தில் தீர்க்கமான நடவடிக்கைகளை மேற்கொண்டு தமிழகத்துக்கு உரித்தான நீரைப் பெறுமாறு திமுக முதல்வரை வலியுறுத்துகிறேன்,” என்று அவர் பதிவிட்டுள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *