தமிழக வரலாற்றில் முதல்முறையாக மாநில பொருளாதார ஆய்வறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது. மாநில திட்டக்குழு தயாரித்துள்ள 2024-2025-ம் ஆண்டுக்கான தமிழ்நாடு பொருளாதார ஆய்வறிக்கையை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டார்.
மாநில திட்டக்குழு சார்பில் முதல்முறையாக 2024-205-ம் ஆண்டுக்கான தமிழ்நாடு பொருளாதார ஆய்வறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வறிக்கையை முதல்வரும், மாநில திட்டக்குழுவின் தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் நேற்று வெளியிட்டார். அப்போது, துணை முதல்வரும், திட்டக்குழுவின் துணை தலைவருமான உதயநிதி ஸ்டாலின், நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலர் ந.முருகானந்தம், திட்டக்குழு செயல் துணை தலைவர் பேராசிரியர் ஜெ.ஜெயரஞ்சன், நிதித்துறை செயலர் த.உதயச்சந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.
இதைத்தொடர்ந்து மாநில திட்டக் குழுவின் 6-வது கூட்டம் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாநில திட்டக் குழுவால் தயாரிக்கப்பட்ட “முதல்வரின் காலை உணவு திட்டம் அரசு தொடக்கப் பள்ளி மாணவர்களிடம் ஏற்படும் தாக்கம் – இறுதி அறிக்கை”, “10 மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வு நடைமுறைகள் குறித்த ஆய்வு” மற்றும் “சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் உள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் வாழ்வியல் பற்றிய ஆய்வு” ஆகிய 3 ஆய்வறிக்கைகளை முதல்வர் வெளியிட்டார்.
இக்கூட்டத்தில், உதயநிதி, ஜெ.ஜெயரஞ்சன், த.உதயச்சந்திரன் ஆகியோரோடு திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை செயலர் ரமேஷ் சந்த் மீனா, துணை முதல்வரின் செயலர் பிரதீப் யாதவ், திட்டக்குழு உறுப்பினர்கள் பேராசிரியர் இராம. சீனுவாசன், பேராசிரியர் சுல்தான் அகமது இஸ்மாயில், கே.தீனபந்து, நா. எழிலன் எம்எல்ஏ, மல்லிகா சீனிவாசன், டாக்டர் ஜெ.அமலோற்பவ நாதன், சித்த மருத்துவர் ஜி.சிவராமன், நர்த்தகி நடராஜ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் ஜெ.ஜெயரஞ்சன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழக பொருளாதாரம், விவசாயம் சார்ந்த பொருளாதாரத்தில் இருந்து விவசாயம் சாரா பொருளாதாரத்தை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது. எதிர்காலத்தில் பல்வேறு சவால்களையும் சந்திக்க வேண்டியுள்ளது. அவற்றில் ஒன்று ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு ஏற்படுத்தும் தாக்கம். மற்றொரு முக்கியமான சவால் மாறிவரும் தொழில்நுட்ப சூழலுக்கு இன்றைய மாணவர்களை எவ்வாறு தயார்படுத்தப் போகிறோம் என்பது.
மாநிலத்தின் கடன் வரம்பு மத்திய திட்டக்குழுவால் வரையறுக்கப்பட்ட கடன் அளவைவிடவும் குறைவுதான். மாநில ஒட்டுமொத்த உற்பத்தியில் தமிழகம் 28 சதவீதம் வரை கடன் பெறலாம் என்பது 15-வது திட்டக்குழுவின் வரையறை. ஆனால், இதுவரை நாம் வாங்கியுள்ள மொத்த கடன் அளவு 26 சதவீதம்தான். இதர மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழகத்தின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி அதிகம். எனவே, கடன் வாங்கும் வரம்பும் இதர மாநிலங்களை விட தமிழகத்துக்கு அதிகம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தின் வளர்ச்சி 12 சதவீதம் என்ற நிலையில் இருந்தால் 2030-ம் ஆண்டுகள் ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற இலக்கை அடைய முடியும். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது திட்டக்குழு உறுப்பினர் டாக்டர் நா.எழிலன் உடனிருந்தார்.
ஆய்வறிக்கையின் முக்கிய அம்சங்கள்: 2023-2024-ம் ஆண்டில் தேசிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) தமிழகத்தின பங்களிப்பு 9.2 சதவீதம் ஆகும். இந்திய பொருளாதார வளர்ச்சி 6.48 சதவீதமாக உள்ள நிலையில் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி 8 சதவீதம். தமிழகத்தின் தனிநபர் வருமான வளர்ச்சி தேசிய சராசரியை விடவும் அதிகம். தனிநபர் வருமானத்தில் தமிழகம் 4-ம் இடத்தில் உள்ளது. மகாராஷ்டிரம், கர்நாடகம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களைப்போல் பெருநகரம் ஒன்றை மையமாக கொள்ளாமல் தமிழகத்தில் மாநிலம் முழுவதும் பரவலான வளர்ச்சி உள்ளது. கடந்த 4 ஆண்டுகளாக மாநிலத்தின் சில்லறை பணவீக்கம் குறைந்து வருகிறது. தேசிய அளவில் தொழிற்சாலைகளின் எண்ணிக்கையில் தமிழகம் முன்னணி மாநிலமாக திகழ்கிறது. 2024 உலக முதலீட்டாளர் மாநாடு மூலம் ரூ.6.64 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டு அதன் வாயிலாக 14.55 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும்.