சென்னை கொளத்தூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் வடிவேலு கலந்துக் கொண்டு உரையாற்றினார். அப்போது, “முதலமைச்சரின் 73-வது பிறந்தநாளைக் கொண்டாடும் இவ்வேளையில், அவரது செயல்பாடுகளைப் பார்த்தால் அது 37-வது பிறந்தநாள் போல இளமையாகத் தெரிகிறது.
எங்கோ போர் நடக்கிறது என்பதால், கடந்த சில நாட்களாக ஒரு பீதி கிளப்பப்பட்டது. யாருக்குமே உணவு கிடைக்காது, பழைய கொரோனா காலத்தைப் போலவும், பணமதிப்பிழப்பு காலத்தைப் போலவும் மக்கள் வரிசையில் நிற்க வேண்டிய சூழல் வரும் என்று அச்சமூட்டினார்கள்.
பெட்ரோல், டீசல் நிலையங்களில் மக்கள் குவிந்தனர். ஹோட்டல்கள் மூடப்பட்டன. எங்கோ நடக்கும் போரினால் நம் வீட்டு அடுப்பு எரியாது என்று பயமுறுத்தினார்கள். அந்த இக்கட்டான சூழலிலும், நமது தமிழக முதலமைச்சர் அவர்கள் பதற்றமடையாமல், உடனடியாகப் பிரதமருக்கு ஒரு கடிதம் எழுதினார். “முதலில் இந்தப் பிரச்சனையைத் தீர்க்க என்ன வழி என்று பாருங்கள்” என்று ஆக்கப்பூர்வமாகச் செயல்பட்டார்.
இங்கே ஒரு கூட்டம் “திமுகவை ஒழிக்க வேண்டும், அழிக்க வேண்டும்” என்று கத்திக்கொண்டிருந்தது. மக்கள் அழியாமல் இருக்க என்ன வழி என்று யோசிக்காமல், ஒரு இயக்கத்தை அழிப்பதையே குறிக்கோளாகக் கொண்டவர்கள் கடைசியில் தாங்கள்தான் காணாமல் போகிறார்கள். திமுக என்பது தஞ்சாவூர் கோபுரத்தைப் போன்றது; அது ஒரு மிகப்பெரிய வரலாற்றுச் சாம்ராஜ்யம். அதை யாராலும் அசைக்க முடியாது. இதுபோன்ற வரலாறு எந்தக் கட்சிக்கும் கிடையாது.