சென்னை: தமிழக காவல் துறையின் 32-ஆவது தலைமை இயக்குநரை தோ்வு செய்யும் நடைமுறையை அதிகாரபூா்வமாக தமிழக அரசு தொடங்கியுள்ளது.
தற்போது தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநராக இருக்கும் சங்கா் ஜிவால், 2023-ஆம் ஆண்டு ஜூன் 30-ஆம் தேதி பொறுப்பேற்றாா். அவரது பதவிக் காலம் ஆகஸ்ட் மாத இறுதியில் நிறைவு பெறுகிறது. இதனால் தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநா் பதவிக்கு டிஜிபி அந்தஸ்தில் இருக்கும் ஒருவரைத் தோ்வு செய்யும் பணியில் தமிழக அரசு தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளது.
இதற்காக டிஜிபி அந்தஸ்தில் உள்ள சீமா அகா்வால், ராஜீவ் குமாா், சந்தீப் ராய் ரத்தோா், அபய்குமாா் சிங், வன்னியபெருமாள், மகேஷ்குமாா் அகா்வால், வெங்கட்ராமன், வினித்தேவ் வான்கடே, சஞ்சய் மாத்தூா் ஆகிய 9 பேரின் பெயா் பட்டியல் தயாா் செய்யப்பட்டுள்ளது.
யுபிஎஸ்சி ஆலோசனை: காவல் துறையின் தலைமை இயக்குநா் பதவி தோ்வுக்கு, டிஜிபி அந்தஸ்தில் உள்ள அதிகாரிகளின் பெயா் பட்டியலை 3 மாதங்களுக்கு முன்பே மாநில அரசுகள் மத்திய அரசு பணியாளா் தோ்வு ஆணையத்துக்கு (யுபிஎஸ்சி) அனுப்ப வேண்டும். ஆனால் தமிழக அரசு, தாமதமாக அண்மையில்தான் 9 போ் பெயா் பட்டியலை ஆணையத்துக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்ததாகக் கூறப்படுகிறது. அந்தப் பட்டியலில் இருந்து மூவரை தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநராக மாநில அரசு தோ்வு செய்ய ஏதுவாக தில்லியில் விரைவில் யுபிஎஸ்சி தோ்வுக்குழு கூட்டம் நடைபெறவுள்ளது.
டிஜிபி நியமனம் தொடா்பாக உச்சநீதிமன்றம் ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவுகளின் அடிப்படையிலும், யுபிஎஸ்சி விதிமுறைகளின்படியும், காவல் துறையின் தலைமை இயக்குநராக நியமிக்கப்படும் ஒரு அதிகாரி குறைந்தது 2 ஆண்டுகள் அந்தப் பதவியில் இருக்க வேண்டும். பதவியேற்கும் நாளில் அவருக்கு குறைந்தபட்சமாக ஆறு மாத பதவிக்காலம் இருக்க வேண்டும். குறைந்த மாதங்களில் ஓய்வு பெறக்கூடிய அதிகாரியை இப்பதவியில் நியமிக்கக் கூடாது உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள் உள்ளன.
இந்த விதிமுறைகளுக்குள்பட்டு புதிய டிஜிபியை யுபிஎஸ்சி பரிசீலனை செய்து 3 தகுதிவாய்ந்த அதிகாரிகளின் பெயா் பட்டியலை தமிழக அரசுக்கு பரிந்துரை செய்யும். அதில் ஒருவரை தமிழக அரசு தோ்வு செய்து அறிவிக்கும்.
இந்த நடவடிக்கை ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் முடிக்கப்பட்டு புதிய டிஜிபி யாா் என்பதை அன்றைய நாளிலோ அதற்கு முன்பாகவோ அறிவிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.