தமிழகத்தில் கடந்த டிசம்பர் மாதம் மிக்ஜம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் அதிதீவிர கனமழை கொட்டியது. இதில் சென்னையே வெள்ளத்தில் தத்தளித்தது. இதேபோல் அடுத்த சில நாட்களில் நெல்லை, தூத்துக்குடிமாவட்டங்களில் கன மழை கொட்டி கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. இதில் இன்னம் இந்த வெள்ள பாதிப்பில் இருந்து பலர் மீளாமல் உள்ளனர்.
மத்திய அரசு மீது விமர்சனம்
இதைத்தொடர்ந்து வெள்ளபாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்றும், நிவாரண நிதியாக ரூ.38,000 கோடி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று தமிழக அரசு கோரிக்கை விடுத்தது. ஆனால், பேரிடராக அறிவிக்க முடியாது என்று கைவிரித்த மத்திய அரசு, நிவாரண நிதி ஒதுக்கீடு செய்யாமல் இருந்தது. இதையடுத்து மத்திய அரசு உடனடியாக வெள்ள நிவாரண நிதி தர வேண்டும் என தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வலியுறுத்தின. மேலும் பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தின்போதும் “வெள்ள நிவாரண நிதியாக ஒரு பைசா கூட வழங்கவில்லை” என்று மத்திய அரசு மீது பிரதான குற்றச்சாட்டை வைத்து கடும் விமர்சனம் செய்தது.இந்த நிலையில் தமிழகத்திற்கு ரூ.276 கோடி வெள்ள நிவாரணமாக மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
ரூ.276 கோடி நிவாரணம்
இதுதொடர்பாக மத்திய நிதித் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில், “மிக்ஜம் புயல் மற்றும் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.276 கோடி நிவாரணம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மிக்ஜம் புயல் பாதிப்புக்கு ரூ.115.49 கோடியும், டிசம்பர் மழை, வெள்ள பாதிப்புக்கு ரூ.160.61 கோடியும் நிவாரணமாக ஒதுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.