பிஹாரை அடுத்து, 2026 தமிழக சட்டப்பேரவை தேர்தலிலும் எங்கள் கூட்டணி அபார வெற்றி பெறும் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
பிஹார் தேர்தல் முடிவுகள் நேற்று வெளியான நிலையில், பெருவாரியான இடங்களில் தேசிய ஜனநாயகக் கூட்டணி முன்னிலை வகித்தது. முன்னணி நிலவரங்கள் வெளியாகிக் கொண்டிருந்த சமயத்தில் நெல்லையில் செய்தியாளர்களிடம் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியதாவது: பிஹார் மாநிலத்தில் உள்ள 243 தொகுதிகளில், தேசிய ஜனநாயகக் கூட்டணி 190 இடங்களில் முன்னணியில் உள்ளது. இது எங்கள் கூட்டணிக்கு கிடைத்த மாபெரும் வெற்றி. அந்த மாநிலத்தில் ஏற்கெனவே நடந்துவரும் நல்லாட்சியை மக்கள் அங்கீகரித்துள்ளனர்.
அத்துடன், தொடர்ச்சியாக இண்டியா கூட்டணியை மக்கள் புறக்கணித்துக் கொண்டே வருகிறார்கள். இண்டியா கூட்டணிக்கு தேசிய அளவில் தொடர் தோல்விகள் ஏற்பட்டு வருகிறது. பிஹாரை அடுத்து, 2026 தமிழக சட்டப்பேரவை தேர்தலிலும் எங்கள் கூட்டணி அபார வெற்றி பெறும். தேர்தல் ஆணையம், அமலாக்கத்துறை, வருமான வரித்துறை – இவையெல்லாமே சுதந்திரமாகச் செயல்படும் தனிப்பட்ட அமைப்புகள்.
இவற்றை, அரசியல் கட்சியுடன் ஒப்பிட்டுப் பேசுவது சரியல்ல. கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தலில் திமுக வெற்றி பெற்றபோது, தேர்தல் ஆணையம் யாருடைய கட்டுப்பாட்டில் இருந்தது? திமுக ஜெயித்தால் தேர்தல் ஆணையம் நன்றாக செயல்படுகிறது என்று அர்த்தம். தோற்றுவிட்டால் தேர்தல் ஆணையம் ஒரு சாராருக்கு ஆதரவாக செயல்படுகிறது என்று அர்த்தமா? இப்படிப் பேசுவது முற்றிலும் சந்தர்ப்பவாத அரசியல்.
தேர்தல் ஆணையத்தின் மீது இப்படியெல்லாம் அவதூறு பரப்பியவர்களை பிஹார் மக்கள் புறக்கணித்துள்ளனர். அங்கு இந்தியா கூட்டணியின் தோல்விக்கு இதுவே முக்கிய காரணம். பிஹாரில் தேசிய ஜனநாயக கூட்டணி பெற்றிருக்கும் இந்த வெற்றியானது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.