தமிழகத்திலும் எஸ்ஐஆர்: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட முதல்வருக்கு திருமாவளவன் கோரிக்கை | Special Intensive Voter List Revision in Tamil Nadu too All party meeting should be convened Thirumavalavan Demand

Spread the love

சென்னை: தமிழகத்திலும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தை மேற்கொள்ளப் போகிறோம் என்று தேர்தல் ஆணையம் கூறியிருப்பது தமிழக சட்டப்பேரவை தேர்தலை சீர்குலைக்கும் முயற்சி என்றும், தமிழக முதல்வர் உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டவேண்டும் என்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து திருமாவளவன் வெளியிட்ட அறிக்கையில், “தமிழகத்தில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கை (எஸ்.ஐ.ஆர்) ஒரு வாரத்தில் தொடங்கும் என்று இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறது.

ஏற்கெனவே பிஹார் மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் ஏகப்பட்ட குளறுபடிகள் செய்யப்பட்டுள்ளன. லட்சக்கணக்கான வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, தலித் முஸ்லிம் வாக்காளர்கள் குறிவைத்து நீக்கப்பட்டு இருப்பதாக ஆதாரங்களோடு புகார்கள் கூறப்பட்டுள்ளன. இவை எதற்கும் தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்கவில்லை.

சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கை குடியுரிமை திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுகிறது, அவ்வாறு செய்வதற்கு தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் இல்லை. எனவே, இதை நிறுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் ஏராளமான வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் வழக்கு தொடுத்துள்ளது.

இந்த வழக்குகளில் விசாரணை நடந்து கொண்டிருக்கும் நிலையிலே பிஹாரில் தேர்தல் தேதியைத் தன்னிச்சையாக தேர்தல் ஆணையம் அறிவித்துவிட்டது. இது இந்திய ஜனநாயகத்தின் அடித்தளமாக இருக்கின்ற தேர்தல் நடைமுறைகளை சீர்குலைப்பதற்கு தேர்தல் ஆணையமே துணை போகிறது என்பதைத்தான் காட்டுகிறது.

கர்நாடக மாநிலத்தில் ஆலந்த் தொகுதியில் வாக்காளர்களுக்குத் தெரியாமலேயே 6000-க்கும் அதிகமான வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. இதை பாஜக வேட்பாளர் திட்டமிட்டே தேர்தல் ஆணையத்தின் உதவியோடு செய்திருக்கிறார் என்பதை கர்நாடக மாநில அரசு அமைத்த சிறப்பு புலனாய்வுக் குழு ஆதாரங்களோடு வெளிப்படுத்தி இருக்கிறது. அதற்கும் இதுவரை தேர்தல் ஆணையம் எந்த விளக்கத்தையும் அளிக்கவில்லை.

இந்தச் சூழலில் தமிழ்நாட்டிலும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தை மேற்கொள்ளப் போகிறோம் என்று தேர்தல் ஆணையம் கூறியிருப்பது தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முறையாக நடக்குமா என்கின்ற கேள்வியை எழுப்பியுள்ளது. வாக்காளர் பட்டியலை திருத்துவதற்கு தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் உள்ளது. என்றாலும், சட்டத்துக்குப் புறம்பான முறையில் பெயர்களை நீக்கவும் சேர்க்கவும் தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் இல்லை.

எனவே, இந்தப் பிரச்சனையின் தீவிரத்தை உணர்ந்து தமிழக முதல்வர் உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம். எஸ்ஐஆர் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கும் வழக்கு முடியும் வரை தமிழகத்தில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கையை நிறுத்தி வைக்குமாறு இந்தியத் தேர்தல் ஆணையத்தை வலியுறுத்துகிறோம்.” எனத் தெரிவித்துள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *