தமிழகத்தில் அடுத்த வாரம் முதல் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் – ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் தகவல் | Election Commission informs High Court over SIR issue

Spread the love

சென்னை: தமிழகம் உள்ளிட்ட தேர்தலை சந்திக்க உள்ள மாநிலங்களில், சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் அடுத்த வாரம் துவங்க உள்ளதாக, தேர்தல் ஆணையம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

சென்னை தி.நகர் தொகுதியில், வாக்குச் சாவடி அதிகாரிகளாக உள்ள திமுகவினர், ஆளுங்கட்சிக்கு சாதகமாக, 13 ஆயிரம் அதிமுக ஆதரவாளர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கியுள்ளதாகக் கூறி, அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. சத்தியநாராயணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், ‘1998 ம் ஆண்டு தி.நகர் தொகுதியில் 2 லட்சத்து 8 ஆயிரத்து 349 வாக்காளர்கள் இருந்த நிலையில், 30 ஆண்டுகளுக்குப் பிறகு, 2021 ம் ஆண்டு வெறும் 36 ஆயிரத்து 656 வாக்காளர்கள் மட்டுமே அதிகரித்துள்ளனர். மக்கள்தொகைக்கும், வாக்காளர் பட்டியலில் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கைக்கும் பெரும் வித்தியாசம் உள்ளது.

மேலும், தொகுதியில் அதிமுக ஆதரவாளர்கள் 13 ஆயிரம் பேரின் பெயர்கள், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இறந்தவர்களின் பெயர்கள் நீக்கப்படவில்லை. இதுசம்பந்தமாக தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு புகார் மனுக்கள் அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனால், தேர்தல் நியாயமாகவும், நேர்மையாகவும் நடைபெறுவதை உறுதி செய்ய, 2026 ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு முன், தி.நகர் தொகுதியில் வாக்காளர் பட்டியலை மீண்டும் சரி பார்த்து, தவறான சேர்க்கை, நீக்கத்தை களைந்து இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு, தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள் முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தி.நகர் தொகுதியில் மொத்தமாக வாக்காளர்கள் சேர்க்கையும், நீக்கமும் நடந்துள்ளதால், அவற்றை சரிபார்த்து திருத்தக் கோரி தேர்தல் ஆணையத்துக்கு பல மனுக்கள் அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும், இதுசம்பந்தமாக தமிழில் உள்ள ஆவணங்களை மொழிபெயர்த்து தாக்கல் செய்ய ஏதுவாக விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் கோரப்பட்டது.

தேர்தல் ஆணையம் தரப்பில், ‘நாடு முழுவதும் தேர்தலை எதிர்கொண்டுள்ள தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில், பீஹாரைப் போன்ற சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள், அடுத்த வாரம் துவங்க உள்ளது. அப்போது, மனுதாரர் தெரிவித்த புகார்கள் கவனிக்கப்படும்’ என தெரிவிக்கப்பட்டது.

மனுதாரர் தரப்பு கோரிக்கையை ஏற்று வழக்கை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்த நீதிபதிகள், பீஹார் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்கு எதிரான வழக்கில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு நகல்களை தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *