தமிழகத்தில் அட்ஜஸ்ட்; புதுச்சேரியில் அட்டாக்! – காங்கிரஸின் கேம் சேஞ்சர் பிளான் ஒர்க்-அவுட் ஆகுமா?

Spread the love

தமிழகத்தில் முடிவுக்கு வந்த கூட்டணி பஞ்சாயத்து!

இந்தியா கூட்டணியில் தமிழகத்திற்கான தொகுதி பங்கீடு நீண்ட இழுபறிக்கு பிறகு நேற்று முடிவுக்கு வந்தது. கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸுக்கு தமிழ்நாட்டில் 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், இந்த முறை 41 தொகுதிகள், இரண்டு ராஜ்யசபா இடங்கள் மற்றும் ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையுடன் பிடிவாதமாக நின்றது காங்கிரஸ்.

அதனால் தி.மு.க-வுடனான கூட்டணிப் பேச்சுவார்த்தை பல வாரங்களாக முன்னேற்றமின்றி தொடர்ந்தது. அதையடுத்து அகில இந்திய காங்கிரஸ் தலைமையின் அறிவுறுத்தலின்படி அக்கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதனடிப்படையில் 28 தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா சீட் என்ற அடிப்படையில் தி.மு.க – காங்கிரஸ் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டது.

திமுக - காங்கிரஸ் கூட்டணி
திமுக – காங்கிரஸ் கூட்டணி

தமிழகத்தில் கேட்ட தொகுதிகளை குறைவாக கிடைத்துள்ள நிலையில், அந்த இழப்பை புதுச்சேரியில் ஈடுகட்டிவிட வேண்டும் என்று காங்கிரஸ் திட்டமிட்டிருக்கிறது. புதுச்சேரியின் மொத்தமுள்ள 30 தொகுதிகளில் கடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் 15, தி.மு.க 13, இந்திய கம்யூனிஸ்ட் 1, விடுதலை சிறுத்தைகள் 1 என்ற விகிதத்தில் தொகுதி பங்கீடு நடைபெற்றது.

ஆனால் இந்த முறை குறைந்தபட்சம் 20 தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்று காங்கிரஸ் விரும்புகிறது. தமிழகத்தில் ஆட்சியில் பங்கு இல்லாத நிலையில், புதுச்சேரியில் தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும் நோக்கில் காங்கிரஸ் இந்த முடிவு எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. அது தொடர்பாக புதுவை காங்கிரஸ் சார்பில் ஏற்கனவே தொகுதிகளின் பட்டியலை கட்சி தலைமையிடம் சமர்ப்பித்துள்ளது.

`காங்கிரஸ் தலைமையில் தேர்தலை சந்திக்க மாட்டோம்…!’

புதுச்சேரி காங்கிரஸ் கட்சியின் இந்த `மூவ்’ இந்தியா கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் புதுச்சேரியில் காங்கிரஸ் தலைமையில் போட்டியிட விருப்பமில்லை என்று, புதுவை மாநில தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள தி.மு.க எம்.பி ஜெகத்ரட்சகனிடம் நேரில் தெரிவித்துள்ளன.

அத்துடன் அந்தக் கட்சிகள் போட்டியிட விரும்பும் தொகுதிகளின் பட்டியலையும் அளித்துள்ளன. விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஒரு பொது தொகுதி, இரண்டு தனி தொகுதிகள் உள்பட மூன்று தொகுதிகள் வேண்டும் என்று தி.மு.க தலைமையிடம் வலியுறுத்தியுள்ளார். அதேபோல இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் தங்களுக்கும் தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளன.

புதுச்சேரி
புதுச்சேரி

இந்த நிலையில் சென்னை அறிவாலயத்தில் முகாமிட்டிருக்கும் புதுச்சேரி தி.மு.க அமைப்பாளர் சிவா, தொகுதிப் பங்கீடு குறித்து ஆலோசனை செய்து வருகிறார்.

இதற்கிடையில் புதுச்சேரியில் தொகுதிப் பங்கீடு குறித்துப் பேசுவதற்காக தினேஷ் குண்டுராவ் மற்றும் பொன்னம் பிரபாகர் இருவரையும் நியமித்து உத்தரவிட்டிருக்கிறது அகில இந்திய காங்கிரஸ் தலைமை.

அவர்கள் தி.மு.க தலைமையை சந்தித்து பேச்சு வார்த்தையை தொடங்க இருக்கிறார்கள். இந்தியா கூட்டணியில் பல கட்சிகளின் கோரிக்கைகள் குவிந்துள்ள நிலையில், புதுச்சேரியில் தொகுதி பங்கீடு எவ்வாறு முடிவுக்கு வரும், கூட்டணி தலைமை யாரிடம் இருக்கும் என்பது இன்னும் தெளிவாகவில்லை.

Loading…

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *