தமிழகத்தில் அறிவிக்கப்படாத அவசரநிலை உள்ளதா? – கே.பாலகிருஷ்ணன் கேள்வி | Is there an undeclared emergency in Tamil Nadu? ask CPM K.Balakrishnan

1345773.jpg
Spread the love

விழுப்புரம்: “பாஜக – ஆர்எஸ்எஸுக்கு எதிராக, பாசிச ஆட்சிக்கு எதிராக திமுகவுடன் இணைந்து நாங்கள்போராடி வருகிறோம். அதே நேரத்தில் தமிழகத்தில் பட்டா கேட்டு போராடினால், தொழிலாளர்கள் உரிமைக்காக போராடினால் உடனடியாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்கின்றனர். தமிழகத்தில் அறிவிக்கப்படாத அவசரநிலை உள்ளதா என்ற கேள்வி எழுகிறது.” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

விழுப்புரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது மாநில மாநாடு நேற்று காலை தொடங்கியது. இதைத் தொடர்ந்து மாலையில் விழுப்புரம் நகராட்சித் திடலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்துக்கு மாவட்டச் செயலாளர் என்.சுப்பிரமணியன் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர்கள் கே.பாலபாரதி, டி.ரவீந்திரன் முன்னிலை வகித்தனர். இம் மாநாட்டில் சிறப்புரையாற்றி, பிரகாஷ்காரத் பேசியது: இந்துத்துவ வகுப்புவாத சித்தாந்தத்தை பதிவு செய்யும் நோக்கில் பாஜகவினர் செயல்படுகின்றனர்.

மத்திய பாஜக அரசு வகுப்புவாத, மதவெறி கொண்ட அரசாக உள்ளது. பாஜக ஆளும் மாநிலங்களில் ஆர்.எஸ்.எஸ். கோட்பாடுகளை செயல்படுத்துகின்ற வகையிலேயே அதன்செயல்பாடுகள் உள்ளன. இஸ்லாமியர்களின மசூதிகளின் கீழ்பகுதியில் கோயில் இருந்ததாகக்கூறி, பாஜகவினர் கருத்துகளை எழுப்புகின்றனர். இதன் மூலம் மோதலை ஏற்படுத்தும் செயலை அவர்கள் செய்கின்றனர்.

ஆர்எஸ்எஸ் அமைப்பும், பாஜகவும் இந்துக்கள், முஸ்லிம்கள் என்ற மத அடிப்படையில் அரசியலை நகர்த்துகின்றன. இதன் காரணமாக மக்களவை தேர்தலில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் பாஜக கடுமையான பின்னடைவைச் சந்தித்தது. பாபர் மசூதியை இடித்து ராமர் கோயில் கட்டிய அயோத்தி தொகுதியில் பாஜக தோல்வியை சந்தித்தது. மத அடிப்படையில் மக்களைப் பிரித்து, அதை தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ளும் வகையில் பாஜக செயல்படுகிறது. இதை ஒடுக்க மதச்சார்ப்பற்ற மக்களை நாம் ஒன்றிணைக்க வேண்டும்.

மத அடிப்படையில் மக்களைப் பிரித்து அரசியல் செய்யும் பாஜக, மற்றொரு பக்கம் பெரும் நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்படும் அரசாக உள்ளது. இதனால் சமூக, பொருளாதார ஏற்றத்தாழ்வு ஏற்படுகிறது. அனைத்தையும் தனியார்மயமாக்கும் செயலில் மத்திய அரசு ஈடுபடுவதால் தொழிலாளிகள், விவசாயிகள் என அனைத்துத் தரப்பினரும் பாதிக்கப்படுகின்றனர்.

தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியை தோற்கடிக்க வேண்டும், தனிமைப்படுத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயல்படுகிறது. 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலிலும், 2021 சட்டப்பேரவைத் தேர்தலிலும் தமிழகத்தில் மதச்சார்பற்ற அணி வெற்றி பெற்றது. தமிழகத்தில் கால் ஊன்ற ஆர்.எஸ்.எஸ்., பாஜக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. மக்களிடம் இந்துத்துவாவை திணிக்கப் பார்த்தார்கள். ஆனால், அது அவர்களால் முடியவில்லை. நம் கூட்டணி பலமாக இருந்தது.

மத்திய அரசு தனது தவறான கொள்கைகளை முன்னெடுக்கும் போது, திமுக அதை மக்களுக்கு எடுத்துக் காட்டும் போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அவர்களுக்கு உறுதுணையாக இருந்தது. அதே நேரத்தில் தமிழகத்தில் சாம்சங் நிறுவனத்தில் தொழிற்சங்கம் தொடங்குவதற்காக தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களின் அடிப்படை உரிமைக்காக போராடினார்கள். இது இந்தியத் தொழிற்சங்கப் போராட்டத்தில் முத்திரைப் பதித்த போராட்டமாக இருந்தது.

தொழிலாளர் சங்கத்தை பதிவு செய்ய திமுக அரசு மறுத்து வருவது வேதனையாக உள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் ஆட்சி செய்த ஜோதிபாசு, அமெரிக்காவில் தொழில் முதலீட்டை ஈர்க்கச் சென்ற போது மேற்கு வங்கத்துக்கு தொழிற்சாலைகளை அமைக்க வரலாம். அதேநேரத்தில் தொழிலாளர் நலச்சட்டங்களுக்கு முன்னுரிமை அளிப்போம் என்று நிபந்தனை அளித்து அதை செயல்படுத்தி வந்தார். அது மிகச் சிறந்த மாடல். அதுபோன்று திமுக அரசும் இருக்கவேண்டும் என்றார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசியது: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை நிகழ்வை அரசியல் செய்ய பாஜக நினைக்கிறது. தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழக மட்டுமல்ல, நாட்டின் எந்த பகுதியிலும்பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நிகழும் போது அதற்கு எதிராகப் போராடும் இயக்கமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இருந்து வருகிறது.

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை நிகழ்வை அரசியலாக்கும் செயலில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஈடுபடுகிறார். ஆனால் கடந்த ஆட்சிக் காலத்தில் பொள்ளாச்சியில் பாலியல் வன்கொடுமை நிகழ்ந்த போது, அரசை எதிர்த்து போராடினாரா?, அப்போது எங்கே சென்றிருந்தார் அவர்.

பாஜக- ஆர்எஸ்எஸுக்கு எதிராக, பாசிச ஆட்சிக்கு எதிராக திமுகவுடன் இணைந்து நாங்கள் போராடி வருகிறோம். இந்தியா கூட்டணியில் இணைந்து பயணிக்கிறோம். அதே நேரத்தில் தமிழகத்தில் பட்டா கேட்டு போராடினால், தொழிலாளர்கள் உரிமைக்காக போராடினால் உடனடியாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்கின்றனர். தமிழகத்தில் அறிவிக்கப்படாத அவசரநிலை உள்ளதா என்ற கேள்வி எழுகிறது.

விழுப்புரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டு பேரணிக்கு அனுமதி மறுத்து, கடைசி நேரத்தில் அனுமதி தந்தீர்கள். பின்னர் கட்சியின் நிர்வாகிகளை அழைத்து பேரணிக்கு அனுமதியில்லை எனக் கூறுவது ஏன்?. எதிர்க்கட்சியாக இருந்தாலும் எல்லா கட்சிகளும் நடத்துகிற போராட்டங்களுக்கு அனுமதியளிக்க வேண்டும். ஏன் அஞ்சுகிறீர்கள்? இந்த நிலை மாற வேண்டும். தமிழகத்தில் பல்வேறு மாடல்கள் இருந்தாலும் இடதுசாரிகள் மாடல்தான் சிறந்தது.” என்றார்.

இப்பொதுக்கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி, மதுரை எம்.பி. சு.வெங்கடேசன், கட்சியின் மூத்த தலைவர் சௌந்தர்ராஜன் உள்ளிட்டோர் பேசினர். முன்னதாக மாவட்டச் செயற்குழு உறுப்பின பி.குமார் வரவேற்றார். நிறைவில், விழுப்புரம் வட்டச் செயலர் ஆர்.கண்ணப்பன் நன்றி கூறினார்.

மாலையில் மாநாடு நடைபெறும் பகுதியில் தொடங்கிய பேரணி காட்பாடி மேம்பாலம், நகராட்சிப்பகுதி, மருத்துவமனை வீதி, நான்குமுனை சந்திப்பு, ஆட்சியரகப் பகுதி, புதிய பேருந்து நிலையம்வழியாக நகராட்சித் திடல் பகுதியை அடைந்தது. இந்த பேரணியை பிரகாஷ் காரத், பிருந்தாகாரத் உள்ளிட்ட தலைவர்கள் பார்வையிட்டனர். பேரணிக்கு கடைசி நேரத்தில் காவல்துறை அனுமதி மறுத்த நிலையில், அதையும் மீறி பேரணியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நடத்தினர். இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *