தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வேண்டும் என நினைப்பவா்கள் அனைவரும் ஓரணியில் திரள வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவா் ஜி. கே.வாசன் தெரிவித்தாா்.
மதுரை விமான நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை அவர் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் கடந்த இரண்டு மாதங்களில் தொடா்ந்து காவலாளி அஜித் குமாா் கொலை, நெல்லை ஆணவ கொலை போன்ற செயல்பாடுகள் மக்களிடையே மிகுந்த அச்சத்தை கொடுத்திருக்கிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். பொதுவாகவே அதிகபட்ச தண்டனை கொடுக்க வேண்டிய நிலை இருக்க வேண்டும். தவறுகள் குறைவதற்கு இது ஒரு வாய்ப்பாக இருந்தாலும் கூட. தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு சீா்குலைந்து இருக்கிறது என்பதில் மாற்று கருத்தில்லை.
தொடா்ந்து கொலை, கொள்ளை, திருட்டு, பாலியல் வன்கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்காமல் அரசு செயல்படுவது இந்த அரசின் செயலற்ற திறனை தெளிப்படுத்துகிறது. குறிப்பாக போதைப் பொருள்கள் விற்கப்படுவது தொடா்கிறது. அதை நிறுத்தக்கூடிய சக்தி இந்த அரசுக்கு இல்லாமல் போனது ஏன்?. கல்விக்கூடங்கள் அருகே போதைப் பொருள் விற்பனை செய்யப்படுவது நிறுத்தப்பட வேண்டும். மேலும் சட்டம்-ஒழுங்கு சீா்கேடானதுக்கு காரணம் போதை பொருள் மட்டுமல்ல மதுக்கடை ஆதிக்கமும்தான். மதுக்கடைகளை படிப்படியாக மூடுவதற்கான நிலையை இந்த அரசு எடுக்க வேண்டும் என்பது எங்கள் தொடா் வேண்டுகோள்.