‘தமிழகத்தில் ஆட்சி அமைப்பதில் காங்கிரஸ் முக்கிய பங்காற்றும்’ – மேலிட பொறுப்பாளர் நம்பிக்கை | TN Congress observer says party will play key role in determining 2026 election results

1354541.jpg
Spread the love

சென்னை: தமிழகத்தில் நடைபெறும் 2026 சட்டப்பேரவை தேர்தலில் ஆட்சி அமைப்பதில் காங்கிரஸ் முக்கிய பங்காற்றும் என்று அக்ட்சியின் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் கிராம கமிட்டி மண்டல பொறுப்பாளர்கள் மற்றும் மக்களவை தொகுதி பொறுப்பாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம், கட்சியின் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தலைமையில், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை முன்னிலையில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று (மார்ச் 16) நடைபெற்றது. இதில் பங்கேற்ற பொறுப்பாளர்கள் பல்வேறு கருத்துகளை முன்வைத்தனர்.

பின்னர் கிரிஷ் சோடங்கர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் கடந்த 2 மாதங்களில் கிராம சீரமைப்பு மற்றும் கிராம கமிட்டி நிர்வாகிகளை நியமிக்கும் பணிகள் 40 சதவீதம் நிறைவடைந்துள்ளன. மீதம் உள்ள பணிகள் அடுத்த ஒரு மாதத்தில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அகில இந்திய காங்கிரஸ் உத்தரவின்படி நடைபெறும் இந்த பணி, நாட்டுக்கே முன்னோடியாக உள்ளது. இதில் தமிழகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. வரும் 2026 சட்டப்பேரவை தேர்தலில் தமிழகத்தில் ஆட்சி அமைப்பதில் தமிழ்நாடு காங்கிரஸ் முக்கிய பங்காற்றும்.

பாஜகவுன் கூட்டணி அமைக்கும் கட்சிகள் காலப்போக்கில் சிதைக்கப்பட்டுள்ளன. இது தான் பாஜகவின் வரலாறு. இதை மாநிலக் கட்சிகள் புரிந்துகொள்ள வேண்டும். ஆனால் காங்கிரஸ் அப்படி எந்தக் கட்சியையும் அழித்ததில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் கட்சியின் மூத்த தலைவர்கள் கிருஷ்ணசாமி, சு.திருநாவுக்கரசர், கே.வி.தங்கபாலு, பீட்டர் அல்போன்ஸ், அகில இந்திய செயலாளர் சூரஜ் ஹெக்டே, சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார், பொருளாளர் ரூபி மனோகரன், மகளிரணி தலைவி சையத் அசீனா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சொத்து கணக்கு குழு: தமிழக காங்கிரஸூக்கு, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்க வளாகம் உள்பட தமிழகம் முழுவதும் ரூ.2500 கோடிக்கு மேல் சொத்துகள் உள்ளன. பெரும்பாலான சொத்துகள் தனி நபர்கள் மற்றும் ஆக்கிரமிப்பில் உள்ளன. இதனால் கட்சிக்கு வர வேண்டிய வருவாய் தடைபட்டுள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் சொத்து கணக்கு குழு கூட்டமும் கிரிஷ் சோடங்கர் தலைமையில் நடைபெற்றுள்ளது. இதில் காங்கிரஸ் சொத்துக்களை மீட்பதற்கான நடவடிக்கைகள், அதன் மூலம் கட்சி வருவாயை உயர்த்துவது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *