தமிழகத்தில் குரங்கம்மை பாதிப்பு யாருக்கும் இல்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் | Minister Subramanian says that no one is affected by monkeypox in Tamil Nadu

1297186.jpg
Spread the love

சென்னை: தமிழகத்தில் குரங்கம்மை பாதிப்பு யாருக்கும் இல்லை என அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மேலும், குரங்கம்மை பாதிப்பைத் தொடர்ந்து வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு விமான நிலையங்களிலேயே பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது என்றும் அவர் கூறினார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது: உலகம் முழுவதும் குரங்கம்மை பாதிப்பு இருப்பதாக உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது. சில தினங்களுக்கு முன்பு மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா இது தொடர்பான கூட்டத்தை கூட்டி இந்தியாவில் யாரும் குரங்கம்மை நோயால் பாதிக்கப்படவில்லை என தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் குரங்கம்மை நோய்த் தொற்றால் இதுவரை யாரும் பாதிக்கப்படவில்லை. குரங்கம்மை பாதிப்பு தொடர்பான விழிப்புணர்வு பலகையை அனைத்து விமான நிலையங்களிலும் வைக்க இருக்கிறோம். நானும் அதை ஓரிரு நாட்களில் ஆய்வு செய்ய இருக்கிறேன். வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு விமான நிலையங்களிலேயே பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. ஏதேனும் அறிகுறிகள் இருந்தால் அவர்களுக்கு அங்கேயே சிகிச்சை அளிக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

உலக சுகாதார அமைப்பின் அறிவிப்பு: கடந்த இரண்டு ஆண்டுகளில் இரண்டாவது முறையாக குரங்கு அம்மையை சர்வதேச பொது சுகாதார அவசரநிலையாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. குரங்கம்மை தொற்று இதுவரை 116 நாடுகளில் பரவியதையடுத்து உலக சுகாதார அமைப்பின் (WHO) அவசரக் குழுக் கூட்டம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

காங்கோ குடியரசில் பரவத் தொடங்கிய தொற்றால் இந்த ஆண்டு மட்டும் இதுவரை, ஆப்பிரிக்காவில் 14,000க்கும் மேற்பட்ட பாதிப்புகள் மற்றும் 524 இறப்புகள் பதிவாகியுள்ளது. இதில் 96% பாதிப்புகள் மற்றும் இறப்புகள் காங்கோவில் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இதுவை மேற்கு, மத்திய மற்றும் கிழக்கு ஆப்பிரிக்கவில் உள்ள 116 நாடுகளில் இந்த தொற்று பரவி வருகிறது.

குரங்கு அம்மை எதனால் ஏற்படுகிறது? – குரங்கு அம்மை வைரஸால் ஏற்படும் ஓர் அரிய வகை தொற்று நோய் இது. குரங்கு அம்மை வைரஸ் என்பது Poxviridae குடும்பத்தின் Orthopoxvirus இனத்தைச் சேர்ந்த ஒரு இரட்டை இழை DNA வைரஸ். இந்த வைரஸில் இரண்டு தனித் தனி மரபியல் பிரிவுகள் உள்ளன. முதலாவது பிரிவு மத்திய ஆப்பிரிக்க நாடுகளிலும் (காங்கோவைச் சுற்றியுள்ள நாடுகள்), இரண்டாவது பிரிவு மேற்கு ஆப்பிரிக்க நாடுகளிலும் கண்டறியப்பட்டன. இவற்றில் காங்கோ பகுதியில் கண்டறியப்பட்ட வைரஸே கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் ஒன்றாக இருந்தது. இது வரை ஒரே நாட்டில் இந்த இரண்டு வைரஸ் பிரிவுகளும் கண்டறியப்பட்டது கேமரூனில் மட்டுமே.

1958இல் குரங்கு அம்மை நோய் கண்டுபிடிக்கப்பட்டது. முதன் முதலில் ஆய்வகத்தில் உள்ள குரங்குகளிடமிருந்து கண்டுபிடிக்கப்பட்டதால், இந்த நோய் குரங்கு அம்மை என அழைக்கப்படுகிறது. இந்த நோய் ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில் விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு 1970இல் பரவத் தொடங்கியது. மனிதர்களுக்கு ஏற்பட்ட முதல் பாதிப்பு காங்கோ நாட்டில் கண்டறியப்பட்டது. அதன் பின்னர், இந்தத் தொற்று 2017இல் நைஜீரியா, காங்கோ உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளில் பரவியது. தற்போது இந்தப் பரவல் ஆப்பிரிக்கக் கண்டத்தைத் தாண்டி உலகெங்கும் பரவத் தொடங்கியுள்ளது.

அறிகுறிகள்: காய்ச்சல், தலைவலி,உடல்வலி,முதுகுவலி,உடல் நடுக்கம், சோர்வடைதல்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *