தமிழகத்தில் ‘குரங்கு அம்மை’ நோயே இல்லாத நிலை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்  | Mpox free state has emerged in Tamil Nadu: Minister M. Subramanian

1303222.jpg
Spread the love

சேலம்: “தமிழகத்தில் குரங்கு அம்மை நோயே இல்லாத நிலை உருவாகியுள்ளது,” என மருத்துவம் மற்றும் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரியில் இன்று (ஆக.30) நடந்த 29-வது பட்டமளிப்பு விழாவில் மாணவ, மாணவிகளுக்கு மருத்துவம் மற்றும் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பட்டங்களை வழங்கி பாராட்டினார். இந்நிகழ்வில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியது: “சேலம் அரசு மோகன்குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரியில் 29-வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். சேலம் மருத்துவக் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் பேரிடர் காலத்தில் அரும்பணி ஆற்றியுள்ளனர். இன்று 101 பேருக்கு பட்டமளிக்கப்படுகிறது. இக்கல்லூரியில் 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டில் அரசு பள்ளி மாணவர்களும் பயின்று வருவது மகிழ்ச்சி.

கடந்த 2001-ம் ஆண்டுக்கு முன்பு இம்மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 2 ஆயிரம் பேர் சிகிச்சைக்கு வந்த நிலையில், தற்போது, 3,500 பேர் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். உள்நோயாளிகளாக 1,500 பேர் வந்து பயன் அடைகின்றனர். இங்கு நிறுவப்பட்டுள்ள பெர்ஸ்சிடைஸ் ஸ்கேன் ரூ.12 கோடி மதிப்பிலான கருவி மூலம் துல்லியமாக புற்றுநோயை கண்டுபிடிக்க வல்லது. தற்போது ,மாநிலம் முழுவதும் ஏழு இடங்களில் பெர்ஸ்சிடைஸ் ஸ்கேன் நிறுவப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் அச்சுறுத்தும் புற்று நோயை கண்டறிந்து, அதற்கு சிகிச்சை அளிக்க இந்த பெர்ஸ்சிடைஸ் ஸ்கேன் மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் 18 வயது அடைந்த அனைவருக்கும் புற்றுநோயை கண்டறிய முகாம் நடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பெரிய அளவில் புற்றுநோய் உள்ள இடங்களை கண்டறிந்து, பெர்ஸ்சிடைஸ் கருவி மூலம் ஆரம்பத்திலேயே சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கடந்த ஆக. 14-ம் தேதி உலக சுகாதார நிலையம் மூலம் அவசர பிரகடணம் அறிவித்து, குரங்கு அம்மை நோய் கண்டறிந்து சிகிச்சை அளிக்க முன்னெச்சரிக்கை நடடிக்கை அறிவுறுத்தல் வழங்கியது. தமிழகத்தில் சென்னை, கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட பன்னாட்டு விமான நிலையங்களில் அதிக வெப்பத்துடன் வரும் பயணிகளை கண்டறிந்து, முன்னெசரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன் மூலம் தமிழகத்தில் குரங்கு அம்மை நோயே இல்லாத நிலை உருவாகியுள்ளது,” என்று அவர் பேசினார்.

இவ்விழாவில் மருத்துவக்கல்லூரி டீன் (பொ) மணிகாந்தன், ஆட்சியர் பிருந்தாதேவி, மருத்துவம் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், எம்பி டி.எம்.செல்வகணபதி, எம்எல்ஏ-க்கள் ராஜேந்திரன் , அருள், மருத்துவ கண்காணிப்பாளர் ராஜ்குமார், துணை முதல்வர் வெங்கடேஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *