திருச்சி: தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்கு ஆசைப்படுவது தவறோ, பாவமோ இல்லை என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்தார்.
திருச்சியில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியது: தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்ற கருத்து தற்போது அதிகளவில் பேசப்பட்டு வருகிறது. மத்தியில் பாஜக தலைமையிலான ஆட்சி கூட்டணி ஆட்சிதான். இதற்கு முன்பு வாஜ்பாய், நரசிம்மராவ் ஆகியோர் பிரதமர்களாக இருந்தபோதும் கூட்டணி ஆட்சி தான் நடந்தது. பல மாநிலங்களிலும் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.
ஆனால், வித்தியாசமான சூழல் கொண்ட தமிழகத்தில் கடந்த 57 ஆண்டுகளாக கூட்டணி ஆட்சி வந்ததில்லை. அமைச்சரவையில் இடம் வேண்டும் என்று கூட்டணி கட்சிகள் கேட்பதில் தவறு இல்லை.
கூட்டணி ஆட்சிக்கு ஆசைப்படுவது பாவமும் இல்லை. திமுக கூட்டணியில் உள்ள சில கட்சிகள் தேர்தல் ஆணைய அங்கீகாரத்துக்காக இரட்டை இலக்க எண்ணிக்கையில் இடம் வேண்டும் என கேட்கிறார்கள். ஆனால், யாரும் அதை ஒரு நிபந்தனையாக வைக்கவில்லை. காங்கிரஸ் கட்சியும் கூடுதல் தொகுதி கேட்டோ, கூட்டணி ஆட்சி குறித்தோ நிபந்தனை விதிக்காது.
விசிக தலைவர் திருமாவளவன் காங்கிரஸ் குறித்து விமர்சனம் செய்யமாட்டார். ஆனால், வன்னியரசு போன்ற அடுத்தக்கட்ட தலைவர்கள் கூட்டணி தர்மத்தோடு பேச வேண்டும். திமுக கூட்டணிக்கு விழும் 4 ஓட்டுகளில், தங்கள் ஓட்டு 1 என விசிகவினர் சொன்னால், அந்த 4 வாக்குகளில் 3 வாக்குகள் எங்களது (காங்கிரஸ்) வாக்குகள் என கூற முடியும்.
விஜய் கட்சியின் மதுரை மாநாட்டில் ராகுல்காந்தி கலந்து கொள்வாரா என்ற கற்பனைக்கு பதில் கூற முடியாது. காமராஜர் குறித்து திருச்சி சிவா எம்.பி. கூறிய கருத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.