சென்னை: வரும் கோடைக்காலத்தில் தினசரி மின்தேவை 22 ஆயிரம் மெகாவாட் அளவுக்கு அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 10 சதவீதம் அதிகம் ஆகும்.
தமிழகம் முழுவதும் 2.5 கோடி வீடுகளுக்கான மின் இணைப்புகளும், 40 லட்சம் வணிகப் பயன்பாட்டு மின் இணைப்புகளும், 25லட்சம் விவசாய மின்இணைப்புகளும் உள்ளன. மேலும், நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மக்கள் தொகை மற்றும் தொழிற்சாலைகள் காரணமாக மின்தேவை அதிகரித்து வருகிறது. தற்போது தினசரி மின்தேவை 15 ஆயிரம் மெகாவாட்டாக உள்ளது.
இதில் 4 ஆயிரம் மெகாவாட் மட்டுமே மின்வாரியம் உற்பத்தி செய்கிறது. எஞ்சியவை மத்திய தொகுப்பில் இருந்தும், தனியார் நிறுவனங்களிடம் இருந்து வாங்குகிறது. இந்நிலையில், தற்போது கோடைக்காலம் தொடங்கி உள்ளது. இதனால், வீடுகளில் மின்விசிறி, ஏசி உள்ளிட்ட மின்சாதனங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதனால், இந்த வரும் நாட்களில் மின்தேவை அதிகரிக்கும்.
இதன்படி, இந்த ஆண்டு கோடையில் தினசரி மின்தேவை மிக அதிகபட்சமாக 22 ஆயிரத்து 150 மெகாவாட் அளவுக்கு அதிகரிக்கும் என தென்மண்டல மின்சார குழு கணித்துள்ளது. இது கடந்த ஆண்டை விட 10 சதவீதம் அதிகம் ஆகும். எனினும், அதிகரித்து வரும் மின்தேவையைப் பூர்த்தி செய்ய மின்வாரியம் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.