தமிழகத்தில் கோயில்களுக்குள் செல்போன் கொண்டு செல்ல படிப்படியாக தடை: அமைச்சர் சேகர்பாபு | Tamil Nadu to gradually ban mobile phones inside temples: Minister Sekar Babu

1340766.jpg
Spread the love

சென்னை: “கோயில்களில் செல்போன் கொண்டு செல்ல தடையினை படிப்படியாக செயல்படுத்திட முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். நீதிபதி மகாதேவன் உத்தரவின்படி திருச்செந்தூர், மதுரை, பழனி போன்ற கோயில்களில் இன்றைக்கு செயல்பாட்டில் உள்ளது. செல்போன்களை பாதுகாப்பதற்கான கட்டமைப்புகளை உருவாக்கி அனைத்து கோயில்களிலும் படிப்படியாக செயல்படுத்துவதற்கு இந்து சமய அறநிலையத்துறை முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது,” என்று இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.

சென்னையில் உள்ள பாடி, படவேட்டம்மன் திருக்கோயில் வளாகத்தில் தமிழக திருக்கோயில்கள் மற்றும் உபயதாரர்கள் சார்பில் சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கு வழங்குவதற்காக முதற்கட்டமாக, 5 லட்சம் பிஸ்கெட் பாக்கெட்டுகள் மற்றும் 2,000 பிளாஸ்க்குகளை அனுப்பி வைக்கும் பணிகளை கொடியசைத்து இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது: திருச்செந்தூர் கோயிலில் அன்றைய தினம் யானையோடு செல்பி எடுக்க முயன்ற போது அந்த யானை அதற்கு அனுமதிக்கவில்லை. தொடர்ந்து அவர் முயற்சி செய்தபோது இந்த விரும்பத்தகாத சம்பவம் நடைபெற்றுள்ளது.

அந்த சம்பவம் நடந்த பத்து நிமிடங்களுக்குள்ளாகவே அந்த யானை மீண்டும் பாகன் மீது வைத்திருந்த பாசத்துக்காக அவனை தட்டி தட்டி எழுப்புகின்றது. எதிர்பாராதவிதமாக, கோபத்தால் ஏற்பட்ட விளைவாக தான் இதை பார்க்கின்றோம். அதன் பிறகு மீண்டும் குளியலுக்கு கொண்டு சென்ற போது அந்த யானை மீண்டும் ஆனந்தமாக குளிக்கின்றது. ஆகவே வருங்காலங்களில் இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலை நடைபெறாமல் இருக்க அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் நிச்சயமாக எடுப்போம்.

27 கோயில்களில் 28 யானைகள் இருக்கின்றன. அவற்றுக்கு குளியல் தொட்டிகள், 15 நாட்களுக்கு ஒருமுறை மருத்துவ பரிசோதனை, தேவையான உணவுகள், நடைபயிற்சி போன்றவை அளிக்கப்பட்டு வருகின்றன. யானைகளை தெய்வத்துக்கு நிகராக தான் தினமும் பாதுகாத்து வருகின்றோம். இப்படிப்பட்ட ஒரு துயரமான சம்பவம் நடந்திருக்கக் கூடாது. இந்நிகழ்வுக்கு தமிழக அரசும், இந்து சமய அறநிலையத்துறையும் ஆழ்ந்த இரங்கலை வருத்தத்தை பதிவு செய்கிறது.

அந்த நிகழ்வில் உயிரிழந்த பாகனின் குடும்பத்துக்கு ரூபாய் 5 லட்சமும், மற்றொரு நபரின் குடும்பத்துக்கு ரூபாய் இரண்டரை லட்சமும் நிதி உதவியாக திருக்கோயில் சார்பில் வழங்கிட முதல்வர் உத்தரவிட்டுள்ளார். நாளைய தினம் நானே திருச்செந்தூருக்கு நேரடியாக சென்று நிதியுதவியினை வழங்கி முதல்வர் சார்பில் ஆறுதல் கூற இருக்கிறேன். திருச்செந்தூர் கோயில் யானை தொடர்பாக வனத்துறை அமைச்சர் தெரிவித்துள்ள கருத்தினை குறையாக எடுத்துக் கொள்ளக் கூடாது.

அவர் அங்குள்ள சூழ்நிலையை சுட்டிக்காட்டியதாகத்தான் நாங்கள் எடுத்துக் கொள்கிறோம். குறைகள் இருந்தால் நிச்சயமாக அவைகள் நிவர்த்தி செய்யப்படும். அனைத்து கோயில்களிலும் உள்ள யானைகள் வனத்துறையின் அனுமதியோடுதான் பராமரித்துக் கொண்டிருக்கிறோமா என்பதை சரி பார்க்கச் சொல்லி இருக்கின்றோம். அப்படி அனுமதி இல்லாமல் இருக்கின்ற கோயில்களில் நிச்சயமாக வனத்துறை அமைச்சர் கூறிய அறிவுரைப்படி அந்த அனுமதி பெறுவதற்கு உண்டான முயற்சிகளை மேற்கொள்வோம்.

கடந்த ஆட்சி காலத்தில் யானைகளுக்கு குளியல் தொட்டி இல்லை, மாதம் இருமுறை மருத்துவ சிகிச்சை இல்லை, உதாரணத்துக்கு மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இருக்கின்ற யானையைக் காப்பாற்றுவதற்கு டென்மார்க்கில் இருந்து மருத்துவர் கொண்டு வந்தோம். யானையின் மீது கடந்த ஆட்சியை விட அதிக அக்கறை கொண்டது இந்த ஆட்சியாகும். மருத்துவர்களின் அறிவுரையின்படி எந்தெந்த யானைக்கெல்லாம் என்னென்ன பயிற்சிகள், உணவு கட்டுப்பாடு தேவைப்படுகிறதோ, அதை அனைத்தையும் அப்படியே அளிப்பதால் புத்துணர்ச்சி முகாமிற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை.

கோயில்களில் செல்போன் கொண்டு செல்ல தடையினை படிப்படியாக செயல்படுத்திட முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். நீதிபதி மகாதேவன் உத்தரவின்படி திருச்செந்தூர், மதுரை, பழனி போன்ற கோயில்களில் இன்றைக்கு செயல்பாட்டில் உள்ளது. செல்போன்களை பாதுகாப்பதற்கான கட்டமைப்புகளை உருவாக்கி அனைத்து கோயில்களிலும் படிப்படியாக செயல்படுத்துவதற்கு இந்து சமய அறநிலையத்துறை முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *