“தமிழகத்தில் சட்ட விரோத மணல் கொள்ளையை தடுக்க உடனடி நடவடிக்கை தேவை” – பாஜக | TN BJP insists state to take immediate action to curb illegal sand mining

1325106.jpg
Spread the love

சென்னை: தமிழகத்தில் சட்ட விரோத மணல் கொள்ளையை தடுக்க தமிழக முதல்வர் ஸ்டாலின் உரிய நடவடிக்கையை உடனே எடுக்க வேண்டும். மத்திய அமலாக்கத் துறை தமிழக காவல்துறைக்கு அளித்த ₹4730 கோடி மணல் கொள்ளையின் ஊழல் புகார் குறித்து விசாரணை செய்ய சிறப்பு விசாரணை குழுவை அமைக்க வேண்டும் என்று தமிழக பாஜக வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக தமிழக பாஜக இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “விவசாயத்தையும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் மணல் வளத்தையும் நிலத்தடி நீரையும் பாதுகாக்க உரிய நடவடிக்கை தமிழக அரசு எடுக்க வேண்டும்.

மதுரை,திருப்பூர், திருவள்ளூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் மணல் கொள்ளை நடப்பதை வெட்ட வெளிச்சமாக நேற்று வரை ஊடகங்கள் தொடர்ந்து வெளிச்சம் போட்டு காட்டியும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்காதது ஏன்?

தமிழகம் முழுவதும் தற்போது வரலாறு காணாத மணல் கொள்ளைகள் முழ்வீச்சில் அரங்கேறி வருகின்றன. நீர்வளத் துறையின் அமைச்சரே மணல் வளத்தை கொள்ளை அடிப்பவர்களுக்கு துணை இருப்பதால், அதிகாரிகளின் சிவப்பு கம்பள விரிப்புடன் மணல் கொள்ளை தமிழகத்தில் தலைவிரித்து ஆடுகிறது.

தமிழக முழுதும் நீர் நிலைகளில் பல்வேறு ஏரி,குளம் – குட்டைகளில் வண்டல் மண் அல்ல அரசு தற்போது அனுமதி வழங்கி உள்ளது. சிறு, குறு விவசாயிகள் பயன்படுத்தும் வகையில்,நூற்றுக்கணக்கான நீர்நிலைகளிலும் வண்டல் மண் அள்ளும் பணி நடந்து வருகிறது.

வண்டல் மண், களிமண் இல்லாத குளம், குட்டைகளிலும், விதிகளை மீறி அனுமதி வழங்கப்பட்டதுடன், சட்ட விரோதமாக கிராவல் மண் வெட்டி எடுக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் மணல் கொள்ளை குறித்து தொடர்ந்து பல்வேறு ஆதாரங்களுடன் பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகளில் செய்திகள் வந்த போதும், மாவட்ட நிர்வாகமும், கனிமவளத்துறையும், நீர்வளத்துறை அமைச்சரும் சட்டவிரோத மணல் திருட்டு குறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் அமைதி காத்து வருவது அதிர்ச்சி அளிக்கிறது.

ஏரி,குளம், குட்டையில் வண்டல் மண், களிமண் உள்ளதா? கடைசியாக எப்பொழுது இங்கு அரசு அனுமதிக்கப்பட்டு மணல் எடுக்கப்பட்டுள்ளது? தற்போது அதில் எவ்வளவு யூனிட் மண் எடுக்கலாம் என்பது குறித்து, முன்கூட்டியே ஆய்வு செய்து, அப்பகுதியைச் சேர்ந்த கிராம மக்களின் தடையிலா சான்று பெற்று, அதன் அடிப்படையில், மண் அள்ள அனுமதி வழங்கப்படுகிறது.

மண் அள்ளும் பணியை கண்காணிக்க அலுவலர்கள் நியமிக்கப்பட்டும், நிர்ணயிக்கப்பட்ட அளவை காட்டிலும் பல மடங்கு கிராவல் மண் திருடப்படுகிறது.

அரசாங்க ரசீதுகளை போலியாக அச்சடித்து பல ஆயிரம் லோடு மண் கொள்ளையடிக்கப்படுகிறது. இதனால் குளம் – குட்டைகள் அனைத்தும் குவாரிகள் போன்று ஆழமாக்கப்பட்டுள்ளன. இதனால் பல இடங்களில் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு அழிவு நிலைக்குச் சென்றுள்ளது.

தமிழகம் முழுவதும் வண்டல் மண் அள்ள அரசு அறிவித்த விதிமுறைகள் எதுவும் பின்பற்றப்படாமல், வணிக ரீதியாக கிராவல் மண் கொள்ளையடிக்கப்படுகிறது என புகார் சமூக ஆர்வலர்களால் தெரிவிக்கப்பட்டு, இதை கண்காணித்து தடுக்க வேண்டிய அரசுத்துறை அதிகாரிகளும் மவுனம் சாதிக்கின்றனர்.

கனிம வளம் திருடு போவது கண்காணித்து தடுக்க வேண்டிய ஊரக வளர்ச்சி, வருவாய்த்துறை, கனிம வளம், ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளும் மணல் கொள்ளைக்கு துணையாக நிற்பது ஊழல் திமுக அரசின் நிர்வாக சீர்கேடுக்கு முக்கியச் சான்று.

ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை.திமுக அரசு பதவி ஏற்ற பிறகு நீர்வளத்துறையும், குவாரிகளுக்கான பொறுப்பும் அமைச்சர் துரைமுருகனிடம் ஒப்படைக்கப்பட்டு, அதிமுக ஆட்சியில் மணல் திருடிய கொள்ளையர்களுக்கு, கூடுதல் குவாரிகள் செயல்படவும், அளவுக்கதிகமாக மணல் அள்ளவும் திமுக அரசு அரசு விதிகளை தளர்த்தி துணை புரிந்துள்ளது.

மேலும் ஏற்கனவே தமிழகத்தில் சட்டவிரோத மணல் குவாரிகள் மூலம் கொள்ளை அடிக்கப்பட்ட ஊழல் ஊழல் பணம் ₹4,730 கோடி அளவுக்கு பல்வேறு பணப்பரிமாற்றம் நடந்துள்ளது என ஏற்கனவே அமலாக்கத் துறை விசாரணை அறிக்கையில் தெளிவாக குறிப்பிட்டுள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க தமிழக டிஜிபி அவர்களிடமும் பரிந்துரை செய்துள்ளது.

இது குறித்து தமிழக காவல்துறையும், தமிழக அரசும் எந்த விதமான நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. மேலும் மணல் கொள்ளையும் தொடர்ந்து தங்கு தடையில்லாமல் நடைபெற்று வருகிறது.

*தமிழக அரசு மணல் கொள்ளை குறித்து அமலாக்கத்துறை கொடுத்த அறிக்கையின் அடிப்படையில் விரைவில் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், தமிழகத்தில் மணல் கொள்ளை தொடர்ந்து நடைபெறுவதை தடுக்க, மத்திய அமலாக்கத்துறை, இந்திய தண்டனை சட்டப்பிரிவு மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவு சட்டங்களின் கீழ் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், மற்றும் மணல் கொள்ளைக்கு உடனடியாக இருந்த இருக்கின்ற அதிகாரிகள் தானாக முன்வந்து உடனடியாக உரிய விசாரணை நடத்தி சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என வலியுறுத்தப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *