“தமிழகத்தில் சாமானியருக்கு சொத்துவரி உயர்த்தப்படவில்லை” – அமைச்சர் கே.என்.நேரு | Minister KN Nehru about Law and order in tamil nadu and property tax

1340545.jpg
Spread the love

திருச்சி: “எதிர்க்கட்சிகள் சொல்வதுபோல் தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு சீர்கெட்டு போய்விடவில்லை. தேர்தல் வர உள்ளதால் அரசியல் செய்வதற்காக இதுபோன்று பேசுகிறார்கள். அதெல்லாம் உண்மை இல்லை. தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு சிறப்பாக உள்ளது. குடியிருப்பு பகுதிகளை வணிக வளாகம் ஆக மாற்றினால் அவர்களுக்கு வணிக பயன்பாட்டுக்கான வரி வசூல் செய்யப்படும்,” என்று அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார்.

திருச்சியில் இன்று நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்துகொண்ட அமைச்சர் கே.என்.நேரு பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது: “தமிழகத்தில் சொத்துவரி சாமானிய மக்களுக்கு உயர்த்தப்படவில்லை. 10, 15 ஆண்டு காலம் உயர்த்தாமல் இருந்த சொத்து வரியை திடீரென்று அதிகப்படியாக உயர்த்தினால் மக்கள் சிரமப்படுவார்கள் என்பதற்காக சொத்து வரியை உயர்த்துவதற்காக புதிய வழிமுறைகளை நகராட்சி நிர்வாகத் துறை எடுத்துள்ளது.

600 சதுர அடிக்கு கீழே உள்ள கட்டிடங்களுக்கு சொத்து வரி உயர்வு இல்லை. 600-ல் இருந்து, 1200 சதுரடி உள்ளவர்களுக்கு, 25 சதவீதத்திலிருந்து, 35 சதவீதம் வரையிலும், 1,200 சதுர அடியில் இருந்து, 1,800 சதுரஅடி வரை, 50 சதவீதம், 1,800-ல் இருந்து, 2,400 சதுர அடி வரை, 70 சதவீதம், அதற்கும் மேல் பரப்பளவு கொண்ட கட்டிடங்களுக்கு 100 சதவீதம் என சொத்து வரி நிர்ணயம் செய்யப்பட்டது. ஆண்டுக்கு, 6 சதவீதம் சொத்து வரி உயர்த்த சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இயற்கை பேரிடர் மற்றும் மழைக் காலங்களில் அதை நிறுத்தி வைப்பது அரசாங்கத்தின் வழக்கம். அதனால் தொடர்ந்து தமிழகத்தில் பல இடங்களில் சொத்துவரி பெரிதாக உயர்த்தப்படவில்லை.

மழைக்காலம் முடிந்த பிறகு அனைத்து பகுதிகளிலும் புதிய சாலைகள் அமைக்கும் பணி தொடங்கும். மழைக்காலத்தில் சாலை அமைத்தால் சரியாக இருக்காது. சாலை சேதமாகிவிடும். அதனால் புதிய சாலை அமைக்க கொஞ்சம் தாமதம் ஏற்படுகிறது.கோவை, ஆவடி மாநகராட்சிகளைத் தொடர்ந்து திருச்சியிலும் வீடு, வணிக நிறுவனங்களுக்கு மீட்டர் பொருத்தி 24 மணி நேரமும் குடிநீர் வழங்கும் திட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. திருச்சியில் சில பகுதிகளில் மட்டும் முதலில் இத்திட்டம் சோதனை முறையில் நடைமுறைப்படுத்தப்படும்.எதிர்க்கட்சிகள் சொல்வதுபோல் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டு போய்விடவில்லை.

தேர்தல் வர உள்ளதால் அரசியல் செய்வதற்காக இதுபோன்று பேசுகிறார்கள். அதெல்லாம் உண்மை இல்லை. தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு சிறப்பாக உள்ளது. திருச்சிக்கு ஆய்வுக் கூட்டம் நடத்த தமிழக முதல்வர் விரைவில் வருவதாக கூறியிருக்கிறார். திருச்சி பஞ்சப்பூர் பகுதியில் அமைய உள்ள புதிய ஒருங்கிணைந்த பேருந்து முனையம், மணப்பாறை சிப்காட் தொழிற்பேட்டையில் 5 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கும் புதிய தொழிற்சாலை போன்ற அனைத்து திட்டங்களையும் முதல்வர் விரைவில் தொடங்கி வைப்பார். அதற்காக அவரிடம் தேதி கேட்டிருக்கிறோம். பஞ்சப்பூர் பேருந்து முனையம் பொங்கல் பண்டிகைக்குள் திறப்பதற்காக வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. குடியிருப்பு பகுதிகளை வணிக வளாகம் ஆக மாற்றினால் அவர்களுக்கு வணிக பயன்பாட்டுக்கான வரி வசூல் செய்யப்படும்,” என்று அவர் கூறினார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *