சென்னை: தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் சூரியசக்தி மின்சாரத்தை ‘பேட்டரி ஸ்டோரேஜ்’ தொழில்நுட்பத்தில் சேமித்து வைத்து இரவில் வழங்குமாறு மத்திய அரசின் சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் நிறுவனத்திடம் தமிழக மின்வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது.
தமிழகத்தில் ஆண்டுக்கு 300 நாட்களுக்கு மேல் சூரியஒளி கிடைப்பதால் சூரியசக்தி மின்சாரம் தயாரிப்பதற்கான சாதகமான சூழல் நிலவுகிறது. எனவே, தனியார் நிறுவனங்கள் தங்களது சொந்தஉற்பத்திக்கும், எஞ்சிய மின்சாரத்தை மின்வாரியத்துக்கு விற்பனை செய்யும்விதமாகவும் சூரியசக்தி மின்நிலையங்களை அமைத்து வருகின்றன. தற்போதைய நிலவரப்படி தமிழகத்தில் 8,150 மெகாவாட்திறன் உடைய சூரியசக்தி மின்நிலையங்கள் உள்ளன.
இந்தியாவை பொறுத்தவரை, உற்பத்தியாகும் சூரியசக்தி மின்சாரம் உடனுக்குடன் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், வெளிநாடுகளில் அதிக திறன் கொண்ட ராட்சத பேட்டரியில் இந்த மின்சாரம் சேமித்துவைக்கப்படுகிறது.
பேட்டரியில் சேமிப்பு: வெளிநாடுகளில் உள்ளதுபோல, பேட்டரியில் சூரியசக்தி மின்சாரத்தை சேமித்து வைக்கும் தொழில்நுட்பத்தில் சூரியசக்தி மின்நிலையம் அமைக்கும் பணியில் மத்திய அரசின் சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், தமிழகம் தரும் சூரியசக்தி மின்சாரத்தையும் சேமித்து வைத்து, இரவில் வழங்குமாறு அந்த நிறுவனத்திடம் மின்வாரியம் வலியுறுத்தி உள்ளது. இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் மழை காலம் தவிர்த்து மற்ற நாட்களில் தினமும் சராசரியாக 5,000 மெகாவாட் சூரியசக்தி மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதை சேமிக்கும் வசதி இல்லாததால், உற்பத்தி செய்யப்பட்ட உடனே பயன்படுத்தப்படுகிறது. மத்திய அரசின் சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் நிறுவனம் தற்போது பேட்டரியில் சேமிக்கும் தொழில்நுட்பத்தில் சூரியசக்தி மின்நிலையங்களை அமைக்க உள்ளது.
ரூ.10 கோடி செலவாகும்: எனவே, தமிழகத்தில் உற்பத்தியாகும் சூரியசக்தி மின்சாரத்தில் பயன்பாடு போக எஞ்சிய மின்சாரத்தை பேட்டரி ஸ்டோரேஜ் கட்டமைப்பில் சேமித்து வைத்து இரவில் திரும்ப வழங்குமாறு அந்த நிறுவனத்திடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. இது செயல்பாட்டுக்கு வந்தால், இரவில் மின்தேவையை பூர்த்தி செய்ய வெளி சந்தையில் மின்சாரம் வாங்க வேண்டி இருக்காது. இந்த தொழில்நுட்பத்தில் 1 மெகாவாட் திறனில் மின்நிலையம் அமைக்க ரூ.10 கோடி வரை செலவாகும். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.