தமிழகத்தில் செப்.3 வரை மழை பெய்ய வாய்ப்பு | Waether Forecast: TamilNadu to receive rains till Sep.3

Spread the love

சென்னை: தமிழகத்தில் நாளை (ஆக.29) முதல் செப்.3-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

ஒடிசா கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, தெற்கு ஒடிசா பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்து சத்தீஸ்கரில் நிலவுகிறது.

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் நாளை ஓரிரு இடங்களில், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். ஆக.30 முதல் செப்.3-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் நாளை அதிகபட்ச வெப்பநிலை, வழக்கத்தை விட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை அதிகமாக இருக்கக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் நாளையும், நாளை மறுதினமும் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.

தமிழகத்தில் இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக கோவை மாவட்டம் சின்னக்கல்லாரில் 6 செமீ, சோலையாரில் 5 செமீ, உபாசி, வால்பாறையில் தலா 4 செமீ, சின்கோனா, நீலகிரி மாவட்டம் அவலாஞ்சி, தேவாலா, திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில் தலா 3 செமீ, தஞ்சாவூர் மாவட்டம் வெட்டிக்காடு, திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு, நீலகிரி மாவட்டம் விண்ட் வொர்த் எஸ்டேட், மேல் பவானி, பந்தலூர், பார்வூட், கன்னியாகுமரி மாவட்டம் நெய்யூர், முள்ளங்கினாவிளை, திருநெல்வேலி மாவட்டம் நாலுமுக்கு, கோவை மாவட்டம் ஆழியார் ஆகிய இடங்களில் தலா 2 செமீ மழை பதிவாகியுள்ளது.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *