சென்னை: தமிழகம், புதுச்சேரியில் இன்று முதல் வரும் 12-ம் தேதி வரை மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகம் நோக்கி வீசும்மேற்கு திசைக் காற்றில் வேகமாறுபாடு நிலவுவதால், இன்று முதல் வரும் 10-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், வரும் 11, 12-ம் தேதிகளில் சில இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
ஜூலை 6-ம் தேதி (நேற்று) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக சிவகங்கை, சென்னை கோடம்பாக்கம் ஆகிய இடங்களில் 7 செ.மீ.,ஈரோடு மாவட்டம் நம்பியூர், சென்னை அண்ணா பல்கலைக்கழகம், தேனாம்பேட்டை, அண்ணாநகர், வளசரவாக்கம், திருவள்ளூர்,ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் ஆகிய இடங்களில் 6 செ.மீ., சென்னை டிஜிபி அலுவலகம், எண்ணூர், நுங்கம்பாக்கம், திருவொற்றியூர், முகலிவாக்கம், எம்ஜிஆர் நகர், சென்னை ஆட்சியர் அலுவலகம், விழுப்புரம் மாவட்டம் அரசூர், சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை, புதுச்சேரி ஆகிய இடங்களில் 5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் மாலை மற்றும் இரவு நேரத்தில் இடி, மின்னலுடன் கூடிய, லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மன்னார் வளைகுடா மற்றும் அதையொட்டிய தென் தமிழககடலோரப் பகுதிகளில் மணிக்கு35 முதல் 45 கி.மீ. வேகத்திலும்,இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.