தமிழகத்தில் ஜூலை 20 வரை எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? | Heavy Rain Likely on Tamil Nadu from Tomorrow to the July 20th

1369373
Spread the love

சென்னை: தமிழகத்தில் நாளை முதல் 20-ம் தேதி வரை ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:“வடக்கு வங்கக் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது, வடமேற்கு திசையில் நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக, வங்கதேசம் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்க பகுதிகளில் நிலவுகிறது. இது நாளை மேற்குவங்க பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்.

தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்றில் வேக மாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்றும் (ஜூலை 15), நாளையும் ஓரிரு இடங்களிலும், 16 முதல் 20-ம் தேதி வரை ஒரு சில இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் மணிக்கு 30 முதல் 40 கி.மீ வேகத்தில் பலத்த தரைக் காற்று வீசக்கூடும்.

தமிழகத்தில் 15-ம் தேதி நீலகிரி மாவட்டத்திலும், 16-ம் தேதி கோவை மாவட்டத்தின் மலைப் பகுதிகள், நீலகிரி, விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 17-ம் தேதி நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கோவை மாவட்டத்தின் மலைப் பகுதிகள், தேனி, திண்டுக்கல், திருவள்ளூர், ராணிபேட்டை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.

18-ம் தேதி நீலகிரி மாவட்டம் மற்றும் கோவை மாவட்ட மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி, தென்காசி, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

19, 20 தேதிகளில் நீலகிரி மாவட்டம் மற்றும் கோவை மாவட்டத்தின் மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக் கூடும். தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்றும், நாளையும் ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்ப நிலை, வழக்கத்தை விட 7 டிகிரி ஃபாரன் ஹீட் வரை உயரக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும், நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 102 டிகிரி, குறைந்த பட்ச வெப்பநிலை 82 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டி இருக்கக்கூடும்.

தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் இன்றும், நாளையும், சூறாவளிக் காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும்.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி (இன்றைய காலை நிலவரப்படி) அதிகபட்சமாக சேலம் மாவட்டம் சந்தியூரில் 7 செ.மீ, நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் 6 செ.மீ, கடலூர் மாவட்டம் அண்ணாமலை நகர், பரங்கிப்பேட்டை, மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம், நீலகிரி மாவட்டம் கூடலூர் சந்தை ஆகிய இடங்களில் தலா 4 செ.மீ, நீலகிரி மாவட்டம் மேல் கூடலூர், பார்வூட், கடலூர் மாவட்டம் சிதம்பரம், ஸ்ரீமுஷ்ணம், புவனகிரி, திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு ஆகிய இடங்களில் தலா 3 செ.மீ மழை பதிவாகியுள்ளது.” என்று செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *