மதுரை: “தமிழகத்தில் திமுக எப்போது ஒழிகிறதோ, அப்போது தான் மக்கள் உண்மையான ஜனநாயகம், மறுமலர்ச்சியைப் பார்ப்பார்கள். அதை பாஜக நிச்சயம் செய்யும்” என்று மதுரையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசினார்.
மதுரை தெற்கு தொகுதியில் பாஜக முப்பெரும் விழா வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. மாநகர் மாவட்ட தலைவர் மகா சுசீந்திரன் தலைமை வகித்தார். இதில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியதாவது: “தமிழகத்தில் திராவிட கட்சிகளை ஒழிக்க நாடாளுமன்ற தேர்தலில் பிள்ளையார் சுழி போட்டுள்ளோம். தமிழகம் திராவிடத்தின் பிடியிலிருந்து வெளியே வந்துவிட்டதை நாடாளுமன்ற தேர்தல் முடிவு தெளிவுபடுத்தியுள்ளது.
நாடாளுமன்ற தேர்தலில் 39 தொகுதிகளில் மொத்தமுள்ள 68,045 பூத்துகளில் 7,174 பூத்துகளில் பாஜக முதலிடமும், 18,086 பூத்துகளில் 2ம் இடம் பிடித்துள்ளோம். மொத்த பூத்துகளில் 37 சதவீத பூத்துகளில் முதலிடம், 2ம் இடம் பிடித்துள்ளோம். இந்த 37 சதவீதம் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் நூறு சதவீதமாக மாறும். திராவிட கட்சிகளை எதிர்த்து அரசியல் செய்கிறோம். ஒவ்வொரு முறை ஆட்சிக்கு வரும் போதும் ரூ.15 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் கோடி வரை கொள்ளையடிக்கிறார்கள்.
திராவிட கட்சிகளிடம் உள்ள பணம் வங்கக்கடலில் உள்ள தண்ணீரை விட அதிகம். இதை எதிர்த்து 2024-ல் மார்தட்டி நின்றோம் வெற்றி பெற்றோம். மதுரையில் 2ம் இடம் பிடித்ததை மிகப்பெரிய வெற்றியாக கருதுகிறோம். இந்த வெற்றி 2026 தேர்தலில் பாஜக முதலிடம் பிடிப்பதற்கான முன்கூட்டிய அறிவிப்பாக பார்க்கிறோம். மதுரை மக்கள் மாற்றி யோசித்துள்ளனர். தமிழக மக்களும் விரைவில் மாற்றி யோசிப்பார்கள். பாஜகவின் உச்சபட்ச வளர்ச்சி என்பது தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது தான். தமிழகத்தில் வெற்றியை முத்தமிடும் அளவுக்கு வளர்ந்துள்ளோம்.
நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணிக்கு 80 லட்சம் பேரும், பாஜகவுக்கு மட்டும் 50 லட்சம் பேரும் வாக்களித்துள்ளனர். தமிழகத்தில் மிகப்பெரிய ஆளுமைகளான எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் ஆட்சி செய்துள்ளனர். அவர்களுக்கு பின்னால் ஆட்சிக்கு வந்தவர்களை நினைத்து பார்த்துள்ளனர். அந்த கட்சிக்கே ஒரு கோடி பேர் தான் வாக்களித்துள்ளனர். பாஜக கூட்டணியை விட 20 லட்சம் வாக்குகள் தான் அதிகம் பெற்றுள்ளனர்.
அரசு இயந்திரங்களை உன்னிப்பாக கவனிக்கும் அரசு அதிகாரிகள் திமுகவுக்கு அடுத்து அதிகமாக பாஜவுக்கு வாக்களித்துள்ளனர். படித்தவர்கள், இளைஞர்கள் பாஜக பக்கம் திரும்பியதால் திமுகவுக்கும், அதன் கூட்டணி கட்சிகளின் வாக்குகள் குறைந்துள்ளது. நோட்டா கட்சி என கிண்டல் செய்தனர். அதை முறியடித்து கூட்டணியுடன் 18 சதவீதம், தனித்து 13 சாவீதம் வாக்குகள் வாங்கியுள்ளோம்.
கலைஞர் நூற்றாண்டு நாணயம் வெளியீட்டு விழாவில் நான் பங்கேற்றதை பேசுகின்றனர். திமுவுக்கு வலுவான எதிரி யாரென தெரியும். எதிரியாக இருந்தாலும் தகுதியான எதிரிகள் மதிக்கப்படுவர்கள் என்பதற்கு இதுவே சாட்சி. 5 முறை முதல்வராக இருந்த கருணாநிதிக்கு மரியாதை செலுத்தியிருக்கிறோம். அதிமுக கூட்டணியில் இல்லாதபோது எம்ஜிஆர் நூற்றாண்டு நினைவு நாணயத்தை மத்திய அரசு 2017-ல் வெளியிட்டது.
அந்த நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டால் எம்ஜிஆர் ரசிகர்கள் மோடியின் பின்னால் சென்று விடுவார்கள் என நினைத்து, 2 ஆண்டுகள் நாணயத்தை பூட்டி வைத்து 2019-ல் அவர்களாகவே வெளியிட்டார்கள். மோடி வந்து வெளியிட்டால் எம்ஜிஆரை வட மாநில மக்கள் பேசியிருப்பார்கள். எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டால் ஜம்முகாஷ்மீர் மக்களுக்கு எப்படி தெரியும்? எடப்பாடி அவராக நோட்டீஸ் அச்சடித்து ஒட்டினால் தான் தெரியும்.
ஆர்.பி.உதயகுமாரை மதுரையை தாண்டினால் தெரியாது. செல்லூர் கே.ராஜூவை செல்லூரை தாண்டினால் தெரியாது. இப்படி அதிமுக தலைவர்களை அவர்கள் ஊரைத் தாண்டினால் யாருக்கும் தெரியாது. தமிழகத்தில் திமுகவுக்கு எதிரான மனநிலை உள்ளது. 2026-ல் திமுகவுக்கு எதிரான சக்தி ஆட்சியில் அமரப்போகிறது. அதிமுக என்ன குட்டிக்கரணம் அடித்தாலும், திமுக என்ன சங்கு சக்கரம் சுற்றினாலும் பாஜகவின் வளர்ச்சியை தடுக்க முடியாது.
மோடிக்கு பின்னால் நாங்கள் திரண்டிருப்பது திமுகவை ஒழிக்க வேண்டும் என்பதற்காகவே, அந்த ஒற்றை காரணத்துக்காகவே எல்லா வேலைகளையும் விட்டுவிட்டு தமிழகத்தில் இருக்கிறோம். திமுக எனும் தீயசக்திக்கு தமிழகத்தில் இடமில்லை. திமுக என்று ஒழிக்கப்படுமோ அன்று தான் தமிழகத்தில் உண்மையான ஜனநாயகம், மறுமலர்ச்சியை மக்கள் பார்ப்பார்கள். அதை பஜக நிச்சயமாக செய்யும்.
தமிழகத்தில் 2 பெரிய திராவிட கட்சிகளும் தங்களுக்கு எதிராக 3வது அணி உருவாக விடமாட்டார்கள். அந்த நோக்கத்தில் தான் மூப்பனார், வைகோ, விஜயகாந்த் ஆகியோரை ஒழித்துக்கட்டினர். அதே நோக்கத்தில் தான் இப்போது பாஜக மீது தாக்குதல் நடத்துகிறார்கள். இது மிகப்பெரிய சவால். பாஜக செடி வளர ஆரம்பித்துள்ளது. பாஜக வளர்ந்து விட்டால் மக்கள் உண்மையான ஜனநாயகத்தை பார்ப்பார்கள்.
பாஜக தொண்டரின் அடிப்படை ரத்தம் திரராவிட கட்சிகள் வேண்டாம் என்பதே. வெவ்வேறு காலகட்டத்தில் திராவிட கட்சிகளின் பிடியில் மாட்டியுள்ளோம். இப்போது மக்கள் நமக்கு வாக்களிக்க தயாராக இருக்கும் போது ஏன் திராவிட கட்சிகளின் பின்னால் செல்ல வேண்டும். இந்தியாவை சுற்றியுள்ள இலங்கை, வங்கதேசம், நேபாளம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் ஜனநாயகம் தோற்றுள்ளது. இந்தியாவில் மட்டும் ஜனநாயகம் மரியாதையுடன் உள்ளது. இதனால் மோடியின் கரத்தை வலுப்படுத்த வேண்டும். தமிழகத்தில் தேசியம் வளர வேண்டும். பாஜக ஆட்சிக்கு வர வேண்டும்.
தமிழக திட்டங்களுக்கு மத்திய அரசு பணம் கொடுக்கவில்லை என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டி வருகிறார். ரயில்வே திட்டங்களுக்கு இடம் தராவிட்டால் எப்படி நிதி ஒதுக்குவது, நெடுஞ்சாலை திட்டங்களுக்கு ஜல்லி தருவதில்லை. விமான நிலைய விரிவாக்கப்பணிக்கு நிலம் வழங்குவதில் தாமதம் செய்கின்றனர். இப்படி செய்தால் பட்ஜெட்டில் எப்படி நிதி ஒதுக்க முடியும். மதுரை எய்ம்ஸ் திட்டம் பிரதமர் மோடியின் கனவு திட்டம். அவர் தான் எய்ம்ஸ் அமைக்க மதுரையை தேர்வு செய்தார்.
எய்ம்ஸ் திட்டத்துக்கு நிலம் வழங்குவதை தமிழக அரசு தாமதப்படுத்தியது. மரங்களை வெட்ட ஐந்தரை மாதங்களுக்கு பிறகே அனுமதி வழங்கினர். இதனால் எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் தொடங்க காலதாமதம் ஏற்பட்டது. 2026 மே மாதம் மதுரை எய்ம்ஸ் நிச்சயம் செயல்பாட்டுக்கு வரும். மக்கள் பாஜகவை அரசியல் கட்சியாக ஏற்றுக்கொண்டுள்ளனர். ஆளத்தகுதியான கட்சியாக இனி பார்ப்பார்கள். இந்த நேரத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
தலைவர்களும், தொண்டர்களும் நேர்மையாக இருக்க வேண்டும். சிறு தவறுக்கு கூட இடமளிக்கக்ககூடாது. பெரிய சாம்ராஜ்யங்களை எதிர்த்து வந்துள்ளோம். மிகவும் ஜாக்கிரதையாக இருந்து இன்னும் உழைக்க வேண்டும்,” என்று அண்ணாமலை பேசினார். பாஜக மாநில பொதுச் செயலாளர் ராமசீனிவாசன், பெருங்கோட்ட பொறுப்பாளர் கதலி நரசிங்கபெருமாள் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.