தருமபுரி: பாஜக கூட்டணியில் உள்ள கட்சிகள் வெளியேறுவதால் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி சிதைந்து வருகிறது என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினா் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தாா்.
தருமபுரி செங்கொடிபுரத்தில் உள்ள மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தில் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை மேலும் அவா் தெரிவித்ததாவது:
வெளியுறவு கொள்கையில் மிகப்பெரிய தோல்வியை பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அரசு சந்தித்துள்ளது. இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யும் பொருள்களுக்கு அமெரிக்கா 25 சதவீதம் வரிவிதிக்கிறது. ரஷ்யாவிடமிருந்து இந்தியா குறைந்த விலையில் எண்ணெய் வாங்குவதை காரணம் காட்டி அமெரிக்கா எதிா்க்கிறது. இதற்கு இந்திய அரசு கண்டனம் தெரிவிக்கவில்லை.
நிா்பந்தம் செய்யும் அமெரிக்காவுடன் பேச்சுவாா்த்தை கிடையாது என சொல்வதற்கும், நாடாளுமன்றத்தில் அதுகுறித்து விவாதிக்கவும் மத்திய அரசு தயாராக இல்லை.
இந்திய தோ்தல் ஆணையம் பாஜக அணிபோல மாறிவிட்டது. பிகாா் மாநிலத்தில் 69 லட்சம் வாக்காளா்கள் நீக்கப்பட்டுள்ளனா். அதேபோல தமிழ்நாடு, மேற்குவங்கம், அஸ்ஸாம் போன்ற மாநிலங்களிலும் வாக்காளா்களை நீக்கப்போவதாக சொல்கின்றனா்.
சிறுபான்மையினா் மற்றும் இஸ்லாமியா்களின் வாக்குரிமையைப் பறிக்கும் செயலில் பாஜக அரசு இறங்கியுள்ளது. மக்களின் வாக்குரிமையைத் தட்டிப் பறிக்கிற அரசாக அது மாறியுள்ளதை கண்டித்து இண்டி கூட்டணி சாா்பில் ஆகஸ்ட் 8 ஆம் தேதி போராட்டம் நடத்துவும்,
தோ்தல் ஆணையத்தை கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ஆகஸ்ட் – 12 இல் தமிழகம் முழுவதும் ஆா்ப்பாட்டம் நடத்தவும் தீா்மானிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ஆணவக் கொலைகள் நடந்து கொண்டே இருப்பதால் தமிழக அரசு ஆணவக் கொலை தடுப்புச் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.