சென்னை: தமிழகத்தில் இன்று முதல் நவ. 1-ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பில்லை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன், ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறியதாவது: தென் தமிழகப் பகுதிகளில் வடகிழக்குப் பருவமழை தீவிரமாக உள்ளது. இதனால் தென் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், வட தமிழகத்தில் சில இடங்களிலும் மழை பெய்துள்ளது. அக். 26-ம் தேதி (நேற்று) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக நாமக்கல், மதுரை மாவட்டம் சிட்டம்பட்டி ஆகிய இடங்களில் 11 செ.மீ., கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல், மதுரை மாவட்டம் இடையப்பட்டி, உசிலம்பட்டியில் 9 செ.மீ., மதுரை மாவட்டம் சோழவந்தான், குப்பணம்பட்டி, கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டியில் 8 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
வங்கக் கடலில் வலுப்பெற்ற டானா புயல் கரையைக் கடந்தாலும், முழுவதுமாக வலுவிழக்காமல், நிலப் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக நிலவுகிறது. இதனால், மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் இருந்து வறண்ட காற்று வீசுகிறது. எனவே, தமிழகத்தில் இன்று முதல் நவ. 1-ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பில்லை. அதன் பிறகே மழை பெய்வதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.
தமிழகப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று முதல் வரும் 30-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், அக். 31, நவ. 1-ம் தேதிகளில் சில இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழக கடலோரப் பகுதிகளுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை. இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.