தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளில் இருந்து 100 மீ. சுற்றளவில் போதை பொருள் விற்கும் கடைகள் இருக்க கூடாது: ஐகோர்ட் உத்தரவு | There should not be drug shops within 100 meters of schools and colleges

1339846.jpg
Spread the love

சென்னை: சென்னையில் குடிசைப் பகுதிகளில் இருந்து அப்புறப்படுத்தப்பட்ட ஏழை மக்கள் வசிக்கும் பெரும்பாக்கம், கண்ணகிநகர், துரைப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரியும், குடிசைப்பகுதிகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்தும் பெண்ணுரிமை இயக்கம் சார்பில் ஏற்கெனவே உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு நிலுவையில் இருந்து வருகிறது.

இந்த வழக்கு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, இந்த பகுதிகளில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகளவில் இருப்பதாக வழக்கறிஞர் ஆணையர் அறிக்கை சமர்ப்பித்து இருந்தார். இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், நீதிபதி பி.பி. பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, டிஜிபி சங்கர் ஜிவால் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவில், ‘தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மத்தியில் போதைப் பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. விரைவில் செயலியும் தொடங்கப்பட உள்ளது’ என தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதையடுத்து நீதிபதிகள் பிறபித்த உத்தரவு: அண்டை மாநிலங்களில் இருந்து கூரியர்கள் மூலமாக போதைப் பொருட்கள் தமிழகத்துக்குள் தடையின்றி நுழைகிறது. தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளில் இருந்து 100 மீட்டர் சுற்றளவுக்குள் போதை வஸ்துக்களை விற்பனை செய்யும் எந்தக் கடைகளும் இருக்கக் கூடாது. போதைப் பொருட்களின் விற்பனை மற்றும் நடமாட்டத்தை கண்காணிக்கவும், போதைப் பொருள் தடுப்பு போலீஸாரின் செயல்பாடுகளை கண்காணிக்கவும் சிறப்பு கண்காணிப்புக் குழுவையும் அமைக்க வேண்டும். இந்த கண்காணிப்புக் குழுவில் இடம்பெறவுள்ள அதிகாரிகளின் விவரங்களை சீலிட்ட கவரில் தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டு, விசாரணையை நவ.21-க்கு தள்ளி வைத்துள்ளனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *