மதுரை: தமிழகத்தில் புதிய கல்விக் கொள்கைக்கான அவசியம் தற்போது எழுந்துள்ளது என மத்திய இணை அமைச்சர் எல். முருகன் கூறினார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மத்திய இணை அமைச்சர் எல் முருகன் இன்று (பிப்.17) சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மத்திய அரசின் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் தமிழகம் முழுவதுமாக நடந்து வருகிறது. இந்த பட்ஜெட் 2047 ஆண்டுக்கு அடித்தளமிட்டுள்ள பட்ஜெட், தொலை நோக்கு பார்வையுடன் பட்ஜெட் உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழகத்திற்கு கடந்த 10 ஆண்டுகளில் மத்திய அரசு பல்வேறு திட்டங்களுக்கு 11 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் நிதி ஒதுக்கியுள்ளது.
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை ஒப்புக்கொள்வது உள்ளிட்ட அனைத்து விதிமுறைகளுக்கு தமிழக அரசு முதலில் சம்மதம் தெரிவித்தது. தற்போது எதிர்க்கின்றனர். தமிழக மக்கள் மீதும், தமிழ்நாட்டின் கலாச்சாரம், பண்பாட்டின் மேல் பிரதமர் மிகுந்த பற்று வைத்துள்ளார். முதலமைச்சர் ஸ்டாலின் அரசியலுக்காக மக்களை தவறாக திசை திருப்புகிறார்.
ஆரம்பக்கல்வியில் தாய் மொழியை ஊக்குவிப்பது தான் புதிய கல்விக் கொள்கையின் நோக்கம். கல்வியாளர்கள், வல்லுநர்கள் ஆகியோர்களின் ஆலோசனைப் படி உருவாக்கப்பட்டது தான் புதிய கல்விக் கொள்கை. இதை ஏற்றுக் கொள்வதில் என்ன பிரச்சினை இருக்கிறது? 1965-ம் ஆண்டு ஆட்சி இப்போது நடக்கவில்லை, புதிய கல்விக் கொள்கையின் அவசியம் இன்று எழுந்துள்ளது.
தேர்தல் கூட்டணி குறித்து தேசிய தலைமை தான் முடிவெடுக்கும். இவ்வாறு அவர் கூறினார். பின்னர் திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் தரிசனம் செய்தார்.