தமிழகத்தில் புதிய வகை கரோனா தொற்று இல்லை: ​மக்​கள் அச்சப்பட தேவையில்லை – சுகாதாரத்துறை | Health Department says There is no new type of corona infection in tn

1362651.jpg
Spread the love

சென்னை: தமிழகத்தில் புதிய வகை கரோனா தொற்று பாதிப்பு இல்லை என சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளைத் தொடர்ந்து இந்தியாவிலும் கடந்த சில வாரங்களாக கரோனா தொற்று பரவி வருகிறது. தமிழகம், கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்களில் தொற்று பரவல் அதிகரித்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது.

தமிழகத்தைப் பொறுத்தவரை அரசு சார்பில் மேற்கொள்ளப்படும் கரோனா பரிசோதனைகள் நிறுத்தப்பட்டுள்ளன. அதேநேரம், தனியார் மருத்துவமனைகளில் அறிகுறிகளின் அடிப்படையில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இதையடுத்து கடந்த ஏப்ரல் மாதத்தில் தொற்றுக்கு உள்ளானவர்களின் சளி மாதிரிகளை சேகரித்து பகுப்பாய்வுக்காக புனேவில் உள்ள மரபணு பரிசோதனை கூடத்துக்கு பொது சுகாதாரத்துறை அனுப்பியது. அதன் முடிவுகள் சமீபத்தில் வெளியானது. அதில் புதிய வகை பாதிப்பு எதுவும் அவர்களுக்கு இல்லை என்பது உறுதியானதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது: கடந்த மாதம் அனுப்பப்பட்ட மாதிரிகளை மரபணு பகுப்பாய்வு செய்ததில் அவை அனைத்துமே ஒமைக்ரான் வகை தொற்றுதான் என்பது தெரியவந்துள்ளது. அதிலும், அதன் உட்பிரிவுகளாக பிஏ-2, ஜெஎன்-1 உள்ளிட்ட வகை பாதிப்புகளே கண்டறியப்பட்டுள்ளன. எனவே, தமிழகத்தில் தற்போது பரவி வருவது புதிய வகை தொற்று பாதிப்பு இல்லை.

புதிய வகை கரோனா பரவியிருந்தால், தமிழகத்தில் கரோனா பாதிப்பின் தீவிரம் அதிகரித்திருக்கும். உயிரிழப்புகளும் பதிவாகியிருக்கும். ஆனால், அத்தகையை சூழல் ஏதும் தமிழகத்தில் நிகழவில்லை. எனவே, பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம்.

தமிழகத்தில் கரோனா பரிசோதனைகளை விரிவுபடுத்த வேண்டிய அவசியம் தற்போது இல்லை. இணை நோயாளிகள், குழந்தைகள், முதியவர்கள் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *