இது தொடர்பாக டெல்லியில் கனிமொழி எம்.பி. செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது; திருப்பரங்குன்றத்தில் பதற்றமான சூழலை உருவாக்கிவிட்டது பாஜக. நாடாளுமன்றத்தில் திருப்பரங்குன்றம் பிரச்சினையை எழுப்பினோம். ஆங்கிலேயர் வைத்த நில அளவை கல்லில் தீபம் ஏற்றச்சொல்கின்றனர்.
திடீரென்று ஆங்கிலேயர் காலத்தில் வைக்கப்பட்ட கல் மீது தீபம் ஏற்றுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியலமைப்பை மீறி நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார்.நீதிபதி தீர்ப்பை வைத்துக் கொண்டு பாஜகவினர் மத கலவரத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர்.
ஆகமவிதிகளை குழிதோண்டிப் புதைக்கும் வகையில் விளக்கு ஏற்ற நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. மக்களின் பக்தியை நிறுத்த வேண்டும் என்பது எங்கள் நோக்கம் அல்ல. திருப்பரங்குன்றம் விவகாரத்தை மற்றொரு அயோத்தி என சமூக ஊடகங்களில் பேசுகிறார்கள்.
மதம், பக்தியின் பெயரால் குளிர்காய நினைக்கிறது பாஜக; பதற்றமான சூழலை ஏற்படுத்தியது. யாருடைய மனதையும் புண்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசு நடந்து கொள்ளவில்லை.
திராவிட கட்சிகளின் ஆட்சியில் மதப்பிரச்சினைகள் இல்லாத அமைதியான தமிழகமாக உள்ளது. மக்களுக்கு தேவையான அனைத்து கட்டமைப்புகளையும் தமிழ்நாடு அரசு செய்து வருகிறது. ஆர்.எஸ்.எஸ் -பா.ஜ.க.வின் மதவாத அரசியலை தமிழ்நாடு அரசுடன் இணைந்து மதுரை மக்களும் முறியடிப்பார்கள்.
பாஜக ஆளும் மாநிலங்களில் எங்காவது அமைதி நிலவுகிறதா?, மணிப்பூர் கலவரத்தில் இதேபோன்று பிரச்சனைதான் நடைபெற்றது. நாட்டின் ஒற்றுமையை சீர் குலைக்கும் வகையில் திருப்பரங்குன்றம் விவகாரத்தை கையில் எடுத்துள்ளனர். உங்களுக்கும் கட்சிக்கும் நல்லதல்ல என மிரட்டும் தோனியில் கிரண் ரிஜிஜு பேசியது கண்டிக்கத்தக்கது. இவ்வாறு கனிமொழி கூறினார்.
