தமிழகத்தில் மதுபான கொள்கையை மறு ஆய்வு செய்ய வேண்டும்: அரசுக்கு உயர் நீதிமன்றம் பரிந்துரை | Liquor policy in Tamil Nadu should be re-examined: HC

1273874.jpg
Spread the love

மதுரை: தமிழக மக்கள், இளைஞர்கள் நலன் கருதி மதுபான கொள்கையை மறு ஆய்வு/ மறு பரிசீலனை செய்ய வேண்டும் என தமிழக அரசை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

திருச்சி உறையூர் மீன் மார்க்கெட் அருகே மதுபான கூடத்துடன் மனமகிழ்மன்றம் திறக்க தடை விதிக்கக்கோரி பிரபு என்பவர் உயர் நீதிமன்ற கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஜி.அருள்முருகன் அமர்வு விசாரித்தது. இது தொடர்பாக அந்த அமர்வு பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது: “தமிழகத்தில் குடியிருப்பு பகுதிகளில் மிகவும் நெருக்கமாக இருக்கும் டாஸ்மாக் மதுபான கடைகளால், பெண்கள், மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.

மதுவால் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு விதமான சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுவதை காண முடிகிறது. இதனால் தமிழக மக்கள், இளம் தலைமுறையினர் மற்றும் சமுதாய நலன் கருதி மதுபான கொள்கையை தமிழக அரசு மறு ஆய்வு செய்ய வேண்டும். இதை அரசுக்கு வேண்டுகோளாக வைக்கிறோம்.

பொதுமக்கள், இளைஞர்கள், பொதுநல சமூக சேவை அமைப்புகளின் கருத்துகளும் மதுபான கொள்கையை மறு ஆய்வு, பரிசீலனை செய்ய வேண்டும் என்பதாகவே உள்ளது. மதுபான கொள்கையை மறுஆய்வு மற்றும் மறுபரிசீலனை செய்வது அரசுக்கு கடினமாக இருந்தாலும், தமிழக மக்கள், இளம் தலைமுறையினரின் நலன் கருதி உரிய முடிவு எடுக்க வேண்டும்.

மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் 50 மீட்டர் பரப்பளவிலும், பிற பகுதிகளில் நூறு மீட்டர் பரப்பளவில் வழிபாட்டு இடங்கள், கல்வி நிறுவனங்கள் இருந்தால் மதுபான கடைகளுக்கு அனுமதி வழங்கக்கூடாது என்பது விதி. இந்த வழக்கில் மனமகிழ் மன்றம் திறக்கப்பட்டுள்ள இடம் நகராட்சி பகுதிக்குள் வருகிறது. 50 மீட்டர் தொலைவில் வழிபாட்டு இடங்கள், கல்வி நிறுவனங்கள் இல்லை. எனவே, மனமகிழ் மன்றத்துக்கு தடை விதிக்க முடியாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது” இவ்வாறு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியுள்ளனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *