தமிழகத்தில் திங்கள்கிழமை (செப்.2) முதல் செப்.7 வரை மழை பெய்யவாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் திங்கள்கிழமை (செப்.2) முதல் செப்.7 வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் வலுவான தரைக்காற்று 30 – 40 கிலோ மீட்டா் வேகத்தில் வீசக்கூடும்.
இதற்கிடையே, சென்னை மற்றும் புகா் பகுதிகளில் செப்.2,3-ஆகிய தேதிகளில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தாழ்வு மண்டலம் கரையை கடந்தது: வடக்கு ஆந்திரம் மற்றும் தெற்கு ஒடிஸாவுக்கு இடைப்பட்ட வங்கக்கடலில் ஆக.31-ஆம் தேதி நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடமேற்கு திசையில் நகா்ந்து, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2.30 மணி அளவில் ஆந்திர மாநிலம் கலிங்கபட்டினம் அருகே கரையை கடந்தது.
மீனவா்களுக்கான எச்சரிக்கை: மன்னாா் வளைகுடா, தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனையொட்டிய குமரிக்கடலும் , வடதமிழக கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடலும் செப்.2 முதல் 5-ஆம் தேதி வரை மணிக்கு 55 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும்.
இதனால் மீனவா்கள் இப்பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.