சென்னை: மின்மாற்றி கொள்முதலில் நடைபெற்ற ஊழல் குறித்து சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு கூடுதல் விலை கொடுத்து 45,800 மின்மாற்றிகள் வாங்கப்பட்டது குறித்து வழக்கு தொடர்ந்து விசாரணை நடத்த வேண்டும் என்று தமிழக காவல்துறையின் லஞ்ச தடுப்புப் பிரிவிடம் புகார் அளித்து 30 மாதங்கள் ஆகும் நிலையில் இன்றுவரை வழக்குப்பதிவு செய்யப்படவில்லை.
இந்தமுறைகேடுகளில் முதல் எதிரியாக விசாரிக்கப்பட வேண்டியவர் மின்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி. 2-வது எதிரி மின்வாரிய முன்னாள் தலைவர் ராஜேஷ் லகானி. அவர் பாதுகாப்பான முறையில் மத்திய அரசு பணிக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறார். 3-வது எதிரி மின் வாரிய நிதி கட்டுப்பாட்டாளர் வி.காசி. இவரது வீட்டில் வருமானவரித் துறை அண்மையில் சோதனை நடத்தியது.
ஆனால், அவருக்கு மின்வாரியத்தின் தலைமை நிதிக் கட்டுப்பாட்டாளராக திமுக அரசு பதவி உயர்வு கொடுத்து கவுரவித்துள்ளது. மின்மாற்றி கொள்முதலில் தொடர்புடைய எதிரிகள் மீது வழக்கு தொடர்வதற்கு பதிலாக, அவர்களுக்கு சன்மானம் வழங்கும் திமுக ஆட்சியில், இந்த ஊழல் வழக்கில் நீதி கிடைக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. எனவே, இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.