சென்னை: பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டபடி தமிழகத்தில் முதல் முறையாக ஆன்லைனில் உடனடியாக கட்டிட அனுமதி பெறும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்.
தமிழகத்தில் கட்டிடம் மற்றும் மனைப்பிரிவுகளுக்கான அனுமதியை பரப்பளவு, கட்டிடத்தின் உயரம் ஆகியவற்றின் அடிப்படையில், தகுந்த உள்ளாட்சி அமைப்புகள், நகர ஊரமைப்பு இயக்ககம் (டிடிசிபி), சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) ஆகியவை வழங்கி வருகின்றன.
இந்நிலையில், தற்போதைய தொழில்நுட்ப வளர்சிக்கேற்பவும், கோப்புகளை அதிகளவில் குவிப்பதை தடுக்கவும், அனைத்து வகையான செயல்பாடுகளும் ஆன்லைனில் மாற்றப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ஏற்கெனவே, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தில் கட்டிட அனுமதிக்காக ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டு, செயல்பாட்டில் உள்ளது.
அதே போல், உள்ளாட்சி அமைப்புகளிலும் ஆன்லைனில் அனுமதிக்காக விண்ணப்பிக்கும் நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்தாண்டு அக்.2-ம் தேதி முதல் ஊராட்சிகளில் கட்டிட அனுமதிக்கு ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்கும் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. இதையொட்டி பல்வேறு சலுகைகளையும் தமிழக அரசு அறிவித்தது.
தளப்பரப்பு குறியீட்டிலும், பணிமுடிப்பு சான்றிதழ் பெறுவதிலும் சலுகைள் அறிவிக்கப்பட்டன. தமிழக அரசின் ஒருங்கிணைந்த வளர்ச்சி கட்டிட விதிகளின் அடிப்படையில் கட்டி முடிக்கப்பட்ட கட்டிடத்துக்கு பணி நிறைவு சான்றிதழ் பெற்றால்தான் மின்சாரம், குடிநீர், கழிவுநீர் இணைப்புகளை பெற முடியும் என்ற நிலை உள்ளது. இதில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, அதிகபட்சம் 8 வீடுகள் அல்லது 750 சதுர மீட்டருக்குள் உள்ள கட்டிடங்களுக்கு பணி நிறைவு சான்றிதழ் பெற அவசியம் இல்லை. உயரமில்லா கட்டிடங்களுக்கான அதிகபட்ச உயரம் 12 மீட்டரில் இருந்து 14 மீட்டராக உயர்த்தப்பட்டது. அதே போல், 300 சதுரமீட்டர் வரையும், உயரத்தில் 14 மீட்டருக்கு மிகாமலும் கட்டப்படும் வணிக கட்டிடங்களுக்கும் பணி நிறைவு சான்றிதழ் வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழலில், கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட தமிழக அரசின் பட்ஜெட்டில் 2,500 சதுர அடி வரை கட்டப்படும் குடியிருப்பு கட்டுமானத்திற்கு கட்டிட அனுமதி தேவையில்லை. பணி முடிவு சான்று பெற தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பட்ஜெட் அறிவிப்பை செயல்படுத்தும் வகையில், தமிழகத்தில் முதல் முறையாக கட்டிட அனுமதியை ஆன்லைனில் உடனடியாக வழங்கும் திட்டத்தை காலை 11 மணிக்கு தலைமைச்செயலகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
இத்திட்டத்தின் படி,‘www.onlineppa.tn.gov.in
பரிசீலனைக் கட்டணம், கட்டமைப்பு, வசதிக்கட்டணங்களில் இருந்து 100 சதவீதம் விலக்களிக்கப்படுகிறது. 2500 சதுரடி வரையிலான மனையில், 3500 சதுரடியில் கட்டப்படும் வீடுகளுக்கு இத்திட்டம் பொருந்தும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.